கற்பில் சிறந்தவள் சீதை - என் பார்வையில்.
பூமியிலிருந்து வந்தவள்
பொறுமையில் அன்னையைப்போல்
சிறந்தவள் நீ!
பெண்கள், வாழ்க்கையில் சிறக்க
வழிகாட்டியவள் நீ!
இராமன் நாண் ஏற்றியதால்
இராமன் தோள்களுக்கு
மாலையானவள் நீ!
அதீத அன்பால் அரச குடும்பத்தை
ஆனந்த சொர்க்கமாக்கியவள் நீ!
தன் கணவனுக்கு
துயர் நேர்ந்தபோது
கைத்தலம் பற்றி காட்டுக்குள்
சென்றவள் நீ!
பஞ்சணை இல்லாதபோதிலும்
பசிக்கு உணவு இல்லாதபோதிலும்
பொக்கிஷமென போற்றும்
புண்ணியனுடன் உவந்து களித்தவள் நீ!
கயல்விழிகளை கயல் மிஞ்சியதால்
அற்பபுத்திக்காரன் இராவணனால்
வஞ்சிக்கப்பட்டவள் நீ!
உன் மனம் இளகவே
இம்சைகள் செய்த இராவணனை
இலவுகாத்த கிளியாக்கியவள் நீ!
பேரிருளை சூட்டிக்கொண்டு
கண்ணீர் மல்கி
கரைந்து கரைந்து உருகியவள் நீ!
அல்லல் கரைக்கு
எல்லையை கண்டுணர்ந்தான் இராமன்
மீட்டெடுத்தான் உன்னை
மகிழ்ச்சி கடலுக்குள்
மூழ்கும் முன்னே
தீயில் மூழ்க பணிக்கப்பட்டாய்
பெண்களுக்கு ஆணவம் கூடாது
என்று சுட்டிக்காட்டவே
அன்று அக்னிபரீட்சைக்கு
அடிபணிந்தாய் நீ!
அக்னிபகவானும் அஞ்சினான்
உன் கற்பிழக்காத
மேனியைக் கண்டு
விலகி வழிகொடுத்தான்
தீயும் தீண்டாத அன்னையே
கற்பில் சிறந்தவள் நீயே...