[216 ] தாம்பூலம் எனது பாட்டு..!
தரை நெளியும் புழுவென்னைத் தாங்கி நின்று
தயைபுரியும் தண்டுவடம் நீரே யன்றோ?
நுரைதெரியும் 'கடுங்காப்பி' நானும் ஆனால்
நுகரினிய சர்க்கரையும் பாலும் நீரே!
'இரை' நீராய் இல்லாமல் நானும் இங்கே
எழுவேனோ? நடப்பெனோ? இயங்கு வேனோ?
'துரை' உந்தன் ஆட்சியிலே தோண்ட னுக்குத்
துயருண்டோ ? துவள்வுண்டோ? தோல்வி யுண்டோ?
சோதனைத்தீ விழுந்தெழுந்த சோதி நீரே!
சொந்தமெனக் கைகொடுக்கும் வள்ளல் நீரே!
வேதனையாம் வெயிலழிக்கா வேத வித்தே!
வெறுமையிலே பிறந்துமது செயலக ளாலே,
நாதனையும், தூயாவி தம்மை, உம்மை
நல்விளக்கம் செய்தவரே! நலிவே னோ?நான்!
பாதபடி வந்தடைந்தேன் பயமும் விட்டேன்!
பரண்,எனதாய்ப் போனதன்பின் பரலோ கம்,ஏன்?
கம்பம்னான் அதன்மேலே ஆடிக் கண்ணைக்
கவர்வதுவும் உம்கொடியே! கரைமேற் கண்ட
*"சிம்பும்"நான் அலையெனவே சீறி னாலும்
சிரசிலெனைத் தாலாட்டும் கடலும் நீரே!
கும்பம்நான் என்றாலும் குறைவைப் போக்கிக்
குடியிருக்க வந்த,சீவ நீரும் நீரே!
தம்பதிநாம் என்றாலோ என்னை ஆளும்
தலைவன்நீர்! தாம்பூலம் எனது பாட்டு!
.........* சிம்பும் >> நார்த்தும்பு .......
......... கும்பம் >> குடம்.......
-௦-