எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
ஒரு சில வருடங்களாக நான் வெளியில் பயணம் செய்யும் பொழுது, ஆங்காங்கே சுவர்களில், பேருந்துகளில் விளம்பரங்கள் பார்க்க நேரிடும். அவற்றில் உள்ள எழுத்துப் பிழைகள் பளிச்சென்று கண்களுக்குத் தெரியும். சில நேரங்களில் வாசகங்கள் சரியாக இருந்தாலும், மேலோட்டமான பார்வையில் எழுத்துக்கள் மாறித் தெரியும். கவனித்துப் பார்த்தால் சரியாகவே இருப்பதும் புரியும்.
அப்படி மாறி விசித்திரமாகத் தெரிவதை சற்றே மாறுபட்டு சிந்திக்கவும் செய்வேன். கடல் என்பது 'குடல்' என்றும், ஒருவழிப் பாதை என்பது 'ஒருவழிப் பாவை' என்றும், 10 லட்சம் பெண்களுக்கு தலைவி என்பது 'தலைவலி' என்றும் மனதில் பதிவாகி உணர்வேன்.
அது போல, சென்ற வாரம் என் ஊருக்கு பெற்றோரைப் பார்க்க பேருந்தில் செல்லும் போது, ஓட்டுனருக்கு முன் எழுதப் பட்டிருந்த திருக்குறள் அத்தகைய மாறுபட்டு என் மனக் கண்ணில் பதிந்தது.
நான் இப்பொழுது சொல்லவிருப்பது மாறுபட்ட சிந்தனைக்குத்தானே தவிர, திருக்குறளை மாற்றவோ, கொச்சைப்படுத்தவோ இல்லை என்று தெளிவுபடுத்துகிறேன்.
எங்கள் ஊர் சோழவந்தானில் வாழ்ந்து வந்த பெரும்புலவர் அரசஞ் சண் முகனார் செப்டம்பர், 18, 1868 ல் பிறந்து சனவரி, 11, 1915 ல் மரணம் அடைந்தார். 1890 லிருந்து 1902 வரை 12 ஆண்டுகள் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1902 - 1906 வரை மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்திலும் பணியாற்றினார்.
அவர் எழுதிய நூல்கள் பன்னிரண்டு. சிதம்பர வினயாகர் மாலை, ஏகபாத நூற்றந்தாதி, மாலை மாற்று மாலை, தொல்காப்பியப் பாயிரவிருத்தி, மதுரை மீனாட்சியம்மை சந்தத் திருவடி மாலை மற்றும் திருவள்ளுவர் நேரிசை ஆகியவை முக்கியமானவைகளாகும்.
பரிமேலழகர் உரையிலுள்ள பொருந்தாக் கருத்துக்களை மறுப்புகளோடு விலக்கியும், காலத்திற்குப் பொருந்தியவற்றை ஆதாரங்களோடு விளக்கியும் 'செந்தமிழ்' என்ற பத்திரிகையில் 'திருக்குறட்சண்முக விருத்தி' என்று எழுதிவந்தார். அவர் ஒரு இலக்கணக் கடல், நான் ஒரு சிறு துளி.
இப்பொழுது என் கண்களுக்கு மாறுபட்டுத் தோன்றிய திருக்குறளைப் பார்ப்போம்.
'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு' - திருக்குறள்:423
அறிவுடைமை என்ற 43 ஆம் அதிகாரத்தில் உள்ள திருக்குறளாகும்.
பொருள்: யாதொரு பொருளை எவரெவர் சொல்லக் கேட்டாலும், அவரை நோக்காது அப்பொருளின் உண்மையான தன்மையை ஆராய்ந்து பார்த்து தெளிவது அறிவு என்பதாகும்.
இந்த எளிய குறள் சிறுவயதிலிருந்தே படித்துத் தெரிந்திருந்தாலும், என் பார்வையில் கீழ்க்கண்டவாறு வாசித்து விட்டேன்.
'எப்பொருள் மாமியார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு'
(அல்லது)
'மாமனார்வாய்க்' என்று மனதில் பதிந்தது.
சரி இதற்கு இலக்கணமும், பொருளும் பார்ப்போம்.
எப் / பொருள் / யார் / யார் / வாய்க் / கேட் / பினும்
நேர் / நிரை / நேர் / நேர் / நேர் / நேர் / நிரை
எப் / பொருள் / மா / மியார் / வாய்க் / கேட் / பினும்
நேர் / நிரை / நேர் / நிரை / நேர் / நேர் / நிரை
இரண்டிலும் இலக்கணம் சரியாய்த்தான் அமைந்திருக்கிறது.
யாதொரு பொருளை மாமியார் / மாமனார் சொல்லக் கேட்டாலும், அவரை நோக்காது அப்பொருளின் உண்மையான தன்மையை ஆராய்ந்து பார்த்து தெளிவது அறிவு என்பதாகும்.
பல நேரங்களில் மாமியார் அல்லது மாமனார், மகள் மற்றும் மருமகன் வாழ்க்கை நல்லவிதமாய் அமைய ஊக்கம் தரும் செயல்களைச் செய்வர். அவர்கள் செய்யும் தொழில், வீட்டு நிர்வாகம் ஆகியவைகளில் மிகுந்த உதவிகரமாக இருப்பார். என் நண்பர் ஒருவர்க்கு அமைந்த மாமனார் மற்றும் மாமியார் அனைத்து வகையிலும் உதவிகரமாக இருப்பதை நான் அறிவேன்.
அதே நேரத்தில் சில இடங்களில் மகளுக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் மருமகனின் பெற்றோர் மற்றும் உறவினர்களை நெருங்க விடாமல் பலவிதமான சதிகளில் ஈடுபடுவோரைப் பற்றியும் வெள்ளித் திரையிலும், சின்னத் திரையிலும் காட்டுவதைக் காண்கிறோம்.
சில நேரங்களில் நிஜவாழ்க்கையிலும் அத்தகைய துன்பம் தரும் மாமனார், மாமியார்களையும் பார்க்கலாம். உதவும் மாமனார், மாமியார்களையும் பார்க்கலாம். இது பெண்களுக்கும் பொருந்தும்.
எனவே படிப்பறிவுள்ள நாம் 'யார்யார்வாய்க் கேட்பினும்' என்னுமிடத்தில் மாமியார்வாய்க் கேட்பினும் (அல்லது) 'மாமனார்வாய்க் கேட்பினும்' என்று பொருத்தி, ஆராய்ந்து தகுந்த முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று இரு பாலார்க்கும் என் கருத்தைப் பதிவு செய்கிறேன்.