எழுத்து.காம் தோழர்/தோழிகளின் கவனத்திற்கு (பகுதி - 1)
எழுத்து.காம் தோழர்/தோழி -களுக்கு A. பிரேம் குமார்-ன் வணக்கங்கள்.
தேவையின்றி மிருகங்களை, தங்கள் கவிதைகளிலோ, கட்டுரைகளிலோ தவறாக சுட்டிக்காட்டாதிருக்க இக்கட்டுரையை பதித்துள்ளேன்.
தோழர் விநாயகமுருகன் 13 -05 -12 - ல் "அன்பு (love)" என்ற படைப்பை பதிவுசெய்தார். அவரின் சில படைப்புகளை நான் முன்னரே படித்துள்ளதால், அவரின் மனதையும், அதில் மலர்ந்திருக்கும் நல்அன்பையும் என்னால் பிழையின்றி உணர இயலும்.
ஆனால், அவர் கொண்ட தலைப்பு இவ்வுலகிலேயே மிக சக்திவாய்ந்த ஒன்று, "அன்பு". இதனை கையாளும் விதத்தில், அன்புள்ளம் மிக்க அவர், தன்னை அறியாமல் ஒரு பெரும் தவறு செய்துவிட்டார். அது, என் மனதளவில், அவர் செய்த குற்றமல்ல, அவர்கண்முன்னே நடக்கின்ற அநீதியைக் கண்டு வெடிக்கும் வேகத்தில், "அன்பு" கொண்டு திருத்தும் முயற்சியில், அத்தவறு நேர்ந்துவிட்டது.
அவர் கவிதையில் குறிப்பிட்ட தவறு யாதெனில்,
"அன்பு ,
கத்தியின்றி ரத்தமின்றி ,
சாதனை செய்யும் ,
போர்முனை வாளகளைகூட
புறம் காட்டி ஓட செய்யும் !
அன்பை போதிப்பவன்
மட்டும் கடவுள் அல்ல ,
அதை மதிப்பவனும் கடவுள் !
மனிதகுளத்திர்க்கான உண்மையான
அடையாளம் ,
இதை மறுத்தவர்களும் ,
மறந்தவர்களும் மனிதனாய் பிறந்தும்
மிருகங்களின் வரிசையில் !
அன்பு உலகின் அச்சாணி ,
அதில் கடவுளையும் பார்க்கலாம் ,
கருணையையும் பார்க்கலாம் ,
மிருகங்களிடமிருந்து நம்மை பிரித்து காட்டும்
உன்னத சக்தி ! " - விநாயகமுருகன்
-அவர் எழுதும் வேகத்தில், தன்னையும் அறியாது, அன்பைமட்டுமே கொண்டுள்ள மிருகங்களை சாடிவிட்டார்.
மெய்யன்புள்ளம் மட்டுமே கொண்ட உலகிலுள்ள பெருவாரியான மிருகங்களைப் பற்றி,
அனைவரும் அறிந்த ஒன்று, மனிதனைவிட மிருகம் தான் முதலில் உலகிற்கு வந்தது.
மிருகத்துக்கு, கபடநாடகம் அறிந்த மனிதன்போல் சிரிக்கத் தெரியாது.
ஆனால், அன்புள்ளம் கொண்ட மிருகத்திற்கு, அவர் குழுவிலோ (அ) உறவிலோ ஒருவர் பெரும் காயம் அடைந்துவிட்டாலோ அல்லது இறந்து விட்டாலோ, மனம் கசிந்து, கண்ணீர்விட்டு அழத்தெரியும்.
மனிதன்போல், பிணத்தை தூக்கவிடாமல், சொத்துப்பிரிவைப்பற்றிய அறிவற்ற பேச்சை துவக்காது. இதனால்தான், நல்உள்ளம் கொண்ட மிருகங்களுக்கு, பேச்சுசக்தி எதற்கு, அவை பேச்சுசக்திஇன்றி வாழ இயலும் என இறைவன் (அ) இயற்கை முன்பே அறிந்திருக்க கூடும்...???!!!
ஒரே பிரிவு மிருகங்கள் ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டு கொலையில் ஈடுபடுவதில்லை (தன் மிருகப் பிரிவை (உதாரணம், புலி மற்றொருபுலியை) அழித்து விடுவதில்லை).
மாறாக, தாய்-தந்தை என்ற இருமிருகங்கள், ஈன்ற குட்டிகளை ஒரு குறிப்பிட்ட வயது அடையும்வரை பாதுகாத்து, உணவளித்து, வளர்த்து, பின் தனக்கான உணவை எவ்வாறு கைப்பற்றுதல் என்பதை கற்ப்பித்தபின் (அதாவது குறிப்பிட்ட வயது அடைந்தபின்), தாய்-தந்தையை பிரிந்து தனக்கென ஓர் இடம்தேடி இயற்கையை அழிக்காது வசிக்கிறது.
இயற்கையின் விதி, உணவிற்காக மட்டும், ஒரு பிரிவு மிருகம் (சிங்கம், புலி, கழுதைப்புலி,..) மற்றபிரிவு மிருகத்தை (மான், காட்டெருமை, வரிகுதிரை,..) அடித்து, உண்டு வாழ்கிறது. ஒரு பிரிவு மிருகம், தாவர உயிரினங்களை உண்டு வாழ்கிறது. கொடுக்கப்பட்ட அப்பிறவியில் வாழ்வதற்காக மட்டும், இவ்உணவு வேட்டை.
ஆனால், மனிதப்பிரிவில் மட்டும், பெருவாரியான மக்கள், ஒருவன்/ஒருத்தி மற்றொருவன்/மற்றொருத்தியை
மனதளவிலும்,
உடலளவிலும்,
அடித்தே வாழ்கின்றனர். இது இயற்கை விதிக்கு மாறானது. இருந்தும், செய்வது தவறானாலும் பெருமை கொள்கிறார்கள். இவர்களின் பெருமை, எனக்கு சிறுமையாகவே தெரிகிறது.
மனிதன்தான், அடுத்தத் தலைமுறை, அடுத்தத் தலைமுறை என்று அன்பின் பொருளுக்கு இன்றுவரை "மெய்ப்பொருள்" அறியாது, மூளை மழுங்கி, பொருள் சேர்க்கும் பந்தயத்தில்,
தன், தன் குடும்பத்தை தவிர,
உறவினர், நண்பர் மற்றும் நம்மைப்போன்ற மனிதகுல மக்கள் - என்று சிறிதும் மனமில்லாமல்,
வாழ்நாள் முடிவதற்குள்,
பலரை மனதளவில் கொன்றும்,
சிலரை உடலளவில் கொன்றும்,
பொருட்களைச் சேர்த்துவைக்கிறான் அடுத்த தலைமுறையினருக்கு,
ஏன் என்றுகேட்டால், அவனின் குழந்தைகள்மீது அவனுக்கு அதிக அன்பாம். அப்பட்ட பொய்.
சில சமயம் எனக்கும் புரியவில்லை, அவனின் அடுத்த தலைமுறையில், அனைவரும் வேலைசெய்வதற்கு தேவையான கை, கால், கண் மற்றும் பிற உறுப்புகளின்றி ஊனமாக பிறக்கப் போகிறார்களா???
ஏன் இந்த பொருள் சேர்க்கும் பந்தயம்???
ஏன் இந்த கொலை செய்யத் தூண்டும் பந்தயம்???
கண்டிப்பாக, மனிதகுல தொடக்கத்திற்கு முன்புவரை இவ்வியற்கை, இவ்வுலகம் அனைத்தும் நன்முறையிலே இயங்கிக்கொண்டிருந்திருக்கும் என நினைக்கிறேன்.
பாவி மனிதன்
பிறந்துவிட்டான்
படைப்பை அழிக்கத்
துணிந்துவிட்டான்................
குறிப்பு:
1. அனைவரும் அறிந்த ஒன்று, மனிதன் மிருகத்தை வேட்டையாடுவான் (காட்டு நிர்வாகங்களின் கட்டளைகளை மீறியும்)
ஆனால்,
National Geographic - சேனலில் கூறியது, குறிப்பாக மிருகம் மனிதனை வேட்டையாடுவதில்லை இவ்விரண்டு காரணங்களைத் தவிர்த்து, அவைகள்
a) வயதான மிருகம், 40 , 50 .. Kmph வேகத்தில் ஓடும் சக்தியை இழந்து, மிருகங்களை வேட்டையாடமுடியா பட்சத்தில், பாதையில் மனிதர் தென்பட்டால் மட்டுமே வேட்டையாட வாய்ப்புள்ளது.
b) யாராவது ஒரு மனிதன், தாய்-சேய் மிருகங்களுக்கிடையில் நுழைந்துவிட்டால், கண்சிமிட்டும் வினாடியில் மிருகம் மனிதனை கொன்றுவிடும். ஏனெனில், தாய் மிருகம் தன் சேய்மீது கொண்ட உயிரோட்டமுள்ள பாசம்; தன் சேயை மனிதன் ஏதேனும் செய்துவிட்டால் என்ற பயம். மற்றொன்று, மிருகத்திற்கு மனிதனை கண்டால் முதலில் பயம் வந்துவிடும், தனி மிருகத்தின் முன் மனிதன் தென்பட்டால், மிருகம் பயந்து ஓடிவிடும்.
(இதில், காட்டுவழி தவறிய ஊர் (அ) நகரங்களில் உலாவும் மிருகத்தை குறிப்பிடவில்லை)