ஒருத்தன் பார்த்துக்கொண்டிருப்பான்

ஒரு உயரமான
மொட்டை மாடியில் நின்றபடி
நான்கு சாலைகள் சந்திக்கும்
நகரத்தின் முக்கிய இடத்தை
வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்

சிவப்பு நிற சிக்னல் விழுந்தும்
அவசரமாய் கடந்து செல்ல முற்பட்டு
ஒரு வயதான முதியவரை
இடித்து தள்ளி போகும் இளைஞன்

பிச்சை கேட்க்கும் சிறுமியை
நெற்றியில் விபூதி பொட்டுடன்
தன் சொகுசு காரில் அமர்ந்தபடி
விரட்டும் ஒரு பணக்கார புண்ணியவான்

போதையில் பின்னால் வந்து இடித்துவிட்டு
ஒரு கொரூர பார்வை பார்க்க
பயந்தபடி மௌனமாய் நிற்கும்
கல்லூரி மாணவியை வம்புக்கு இழுக்கும்
ஒரு தாடிக்கார குடிமகன்

தவறுதலாய் பேருந்து மாறி ஏறிவிட்டு
நடத்துனரின் வசைபாட்டைவாங்கிகொண்டு
அவமானமாய் இறங்கி தவிக்கும்
கைக்குழந்தையுடன் ஒரு தாய்

ரோட்டோர டிபன் கடை சப்ளையரின்
அதட்டல் குரலில் மிரண்டு
அவசரமாக எச்சில் தட்டுகளை
பொருக்கி தண்ணீரில் கழுவ ஓடி
தடுமாறி விழும் சிறுவனை
பிரம்பால் அடிக்கும் பரோட்டா மாஸ்டர்

குறித்த நேரத்தில் வரவில்லையென
திட்டி தீர்த்து உள்ளே அனுமதிக்க மறுத்து
தன் பெண் ஊழியரை கண்ணீரோடு
வெயிலில் வெளியே நிற்க வைத்து
வெகு நேரமாய் கண்டு கொள்ளாமல்
பாடல் கேட்டு ரசித்துகொண்டிருக்கும்
அழகு சாதன பொருள் கடை முதலாளி

இத்தனை துன்பங்களையும் பார்த்து
சகிக்க முடியாமல்
நகர முற்பட்ட பொழுதுதான்
ஒன்று புரிந்தது

என்னை போலவே
மேலே இருந்து எல்லாத்தையும்
ஒருத்தன்
பார்த்துக்கிட்டிருப்பான்
இந்த திமிர் பிடித்த மிருகங்களுக்கெல்லாம்
கூலி கொடுக்கமலாயா போய்டுவான்.....!!!











எழுதியவர் : jaisee (24-Sep-10, 8:02 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 440

மேலே