முறிந்த கனவின் நாக்கில் தேன்பலா
கத்தரிவெயிலின்
கடிய வெக்கையில்
கரும்புச்சாரின்
கடைசித்துளியாய்
சொட்டச்சொட்ட
காதலித்த
நம்
அன்பின் அடையாளமாய்
கற்கண்டுப்பிள்ளை...
தூதுவளை பூவிதழ்
வாய்விரித்து
நெல்லிச்சுவை
புன்னகை மிளிர
கையில் தவழ்கிறது
நம் காதல் கொடை!
காதல் செய்கையில்
கணம் உணரவில்லை...
மடியில் சுமை தந்தாய்
சுகம் என்றேன்!
திருமணம் ஆகாமல்
என் வயிறு வீங்கியதில்
ஊர் வாய்க்கு
அவல் கிடைத்தது...
அவள் கருவுக்கு
நான் காரணமில்லை!
என்று
கைவிரித்தாயே...
உன் அவள் மனம்
உடைந்தது.
முறிந்த என்
காதல் கனவுக்கு
பரிசு ரொம்ப பெரிசு...
கனவின் நாக்கிலே
தேன்பலா பிள்ளை!
இப்போதும்
எனக்கு சுமை தெரியவில்லை
சுகத்தையே சுமக்கிறேன்.