காதலி என்பவள்...

காதலி என்பவள்
பன்முகம் கொண்டவள்

அவள்
கருமியாகிறாள்
முத்தம் என்றவுடன்!

அவள்
நிலவாகவும் மிளிர்வதுண்டு
விண்மீனாகவும் மின்னுவதுண்டு!

வெளியில் திட்டிக்கொண்டே
மனதிற்குள் திகட்டாமல்
உன்னை காதலிக்க முடியும்
அவளால்!

அனிச்சையாய்க் கூட
உன்னை
இயங்கமுடியாது செய்வாள்!
அவளது
அருகாமையில்...

அவள் மௌனத்தில்
ஆயிரம் புதிர் வைப்பாள்
உன் மௌனத்தை
மிக எளிதாக
மொழிபெயர்ப்பாள்.

கனவுகள் உனக்கு!
நினைவுகளும் உனக்கு!
இவை இரண்டிலும்
உன்னைக் கொள்வதே,
கொல்வதே
பணி எனக்கு என்பாள் அவள்.

காதல் பண்ணலாம்
என்று நீயிருக்கும்
ஓர் மாலையில்
கவிதையாய்ச் சிரிப்பாள்.
காரணமின்றி
சீக்கிரம் செல்வாள்!

காதல் மறந்து
நீயிருக்கும்
ஒரு அலுவலகக் காலையில்,
காதலுடன் வருவாள்...
கவிதையாய்ச் சிரிப்பாள்!
காரணமின்றி
உன் தினத்தை,
தனதாக்கிக் கொள்வாள்!

முகம் பார்க்கும்
கண்ணாடி ஒன்று
வெறுப்படையச் செய்வாள்
உன் முகம் கண்டு...
உன்னை நெடு நேரம்
அதனுடன் செலவிடச் செய்து!

உணர்ச்சியே இல்லாதிருந்த
ஜடமான உன்னை
உணர்வுகள் பொங்கக்
கவிதை
எழுதச் செய்வாள்.
காதல் சோகக் கவிதைகள் உட்பட...

எழுதியவர் : அக்னிபுத்ரன் (27-May-12, 12:03 am)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 345

மேலே