[243 ] எருவிலும் சக்தி இருக்குதே!

தூங்குதல் என்னும் சோர்வகற்று !
துணிவினை உனது நெஞ்சேற்று!
நீங்கிடாக் கல்வி நினைவூக்கு!
நெறிகளை அறிந்து செயல்தூக்கு!
பாங்கோடு பேசப் பயிற்சிஎடு!
பகைவரை மன்னி! துணையாக்கு!
தீங்கினைச் செய்தல் தவிர்த்துவிடு!
தெரிந்தபின் எதையும் தொடங்கிவிடு!

இனியன இல்லா பேசாதே!
எதிர்ப்புகள் வரினும் அஞ்சாதே!
மனிதரேல் தவறும் இயல்பாமே!
மதிப்புடன் திருத்த மறுக்காதே!
கனிகளும் முதலில் பிறக்காதே!
காலமுண்(டு) எதற்கும் மறக்காதே!
தனியனாய்ப் பெருமை சேர்க்காதே!
தடைகளால்த் துவண்டு போகாதே!

உருவுகண்(டு) என்றும் இகழாதே!
உண்மையைச் சொல்லத் தயங்காதே!
எருவிலும் சக்தி இருப்பதனை
இன்றைய ஞானம் மறுக்காதே!
தெரியும்,முன் நட்பை ஏற்காதே!
தேர்ந்தபின் நம்ப மறுக்காதே!
அருவினை என்று கிடையாதே,
அதனதன் காலம் அறிந்தாலே!
-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (30-May-12, 4:25 pm)
பார்வை : 227

மேலே