!!! எனது நண்பன் சகாவின் படுகொலை சம்பவம் !!!

இது கதையுமல்ல, கற்பனையுமல்ல, கவிதையுமல்ல... என்றைக்கோ காலம் என்னுள் பதிவு செய்த உணர்வுகளான ஒரு சிறு உணர்வுதான் இது, எனது இறந்த காலத்தின் ஒரு உண்மை சம்பவம் என்னுடனேயே இறந்துபோகாமல் இருக்க எழுத்து வடிவம் கொடுக்க முயற்ச்சித்தேன். இதை கிறுக்கல் என்றும் சொல்லலாம் ஆனால் கிறுக்கல் அல்ல...
* * * * * *
சகாதேவனும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள் என்றால் சாதாரணமானது அல்ல மிக பெரிய பாச பிணைப்பு எங்கள் உறவு, எங்கள் வீட்டில் மட்டுமல்ல எங்கள் ஊரில் உள்ளவர்களும்கூட எங்கள் உறவை கண்டு ஆச்சர்யபடுவார்கள், அந்த அளவிற்கு எங்கள் பாசப்பினைப்பு உயிரும் உடலுமாக கலந்திருந்தது,

சகா மிகவும் அழகாக இருப்பான், பார்ப்பவர்களை எல்லாம் சுண்டி இழுப்பான், தள தளவென மத மதவென திடமான உடல்கூறு அவனுக்கு, அதனாலேயே எங்கள் ஊரில் அவன்மீது பலர் கண் வைத்தார்கள், எங்கள் தெருவில் உள்ள அவனது தோழர்களுக்கும் தோழிகளுக்கும் அவன்தான் தலைவன், சகாவிடம் அவனது தோழர்களும் தோழிகளும் மிகவும் பணிவாக நடந்துகொள்வதை நான் பலமுறை பார்த்து ரசித்து இருக்கிறேன், அப்பொழுது எல்லாம் சகாவை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும், சகாவின் தோழிகள் பலர் சகாவை தங்கள் காதல் வலையில் வீழ்த்த முயலுவார்கள் ஆனால் சகா அதற்கெல்லாம் மசியமாட்டான், எங்கள் வீட்டிற்கும் எதிர்வீட்டில் இருந்த அனுவை சகா உயிருக்கு உயிராய் காதலித்தான், அதனாலேயே சகா மற்ற தோழிகள் வீசிய காதல் வலையில் அவன் சிக்கவே இல்லை.

அனு, சகா, இவர்களின் காதல் மிக புனிதமானது, ஒவ்வொரு நாளும் அவர்களின் சந்திப்பும் காதல் களவிகளும் மிகவும் சுகமானது, எங்கள் வீட்டு வேப்ப மரத்தடியில்தான் சகாவும் அணுவும் அடிக்கடி சந்தித்து பேசுவார்கள், அந்த வேப்பமரம் இன்றும் இருக்கிறது ஆனால் எனது ஆருயிர் நண்பன் சகா என்னை விட்டு எங்கோ போய்விட்டான்.

எனது நேசிப்பிற்குரிய என்னுயிர் நண்பன் சகா இன்று உயிரோடு இல்லை என்பதை என்னும்பொழுது என் மனது கனமாகி கண்கள் குளமாகிறது, சகா பொல்லாத மனிதர்களால் படுகொலை செய்யப்பட்டான், அப்பொழுது அவனை காப்பாற்ற சொல்லி கடவுளிடம் வேண்டினேன் ஆனால் அந்த கடவுளால்கூட அவனை காப்பாற்ற முடியவில்லை, என் சகா படுகொலை செய்யப்பட்டபொழுது எனக்கு பதினான்கு வயது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவன் நான், ஆதலால் வலியோகளிடமிருந்து என் சகாவை என்னால் காப்பாற்ற முடியவில்லை, அவனை காப்பாற்ற போராடி பார்த்தேன் எனது போராட்டம் தோல்வியில் முடிந்தது, அன்று தெரிந்துகொண்டேன் இந்த கடவள் வெறும் கல்லென்று.
எதிரிகள் எவ்வளவு பெரிய பலசாலிகளாக இருந்தாலும் கூட எனது சகா எளிதாகவும் இலகுவாகவும் தாக்கி வீழ்த்திவிடுவான் இதன்னாலேயே அவனை எதிர்க்க அவனது வட்டத்தில் எல்லோரும் பயந்தார்கள்.

தக தகவென சிவந்திருக்கும் அவனது கொண்டைகளை கண்டால் அத்தனை அழகாக இருக்கும், கூர்மையாக வளந்திருந்த மூக்கும், கரு கருவென நீண்டிருக்கும் அவனது கால் நகங்களும் அவனுக்கு மிக பெரிய ஆயுதம், கருப்பும் சிவப்பும் மஞ்சளும் கலந்த அவனது உருவம் ஓவியமாய் உள்ளத்தில் இன்றும் பதிந்திருக்கிறது. அவன் சிறு வயதில் இருந்தே எனக்கு நெருங்கிய நண்பனாகி போனான், எனது குரலை கேட்டால் எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவான், நான் அமர்ந்திருப்பேன் என்னுடைய தொடையில் ஏறி அமர்ந்துகொண்டு என்னுடன் பேசுவது என்பது அவனுக்கு மிகவும் பிடித்த விஷயம், விடிந்துவிட்டது எழுங்கள் என்று ஊரையே முதல் ஆளாய் தட்டி எழுப்பும் அவனது பணி மகத்தானது,

சகா மிகவும் நாகரிகமானவன் அவனது உணவை தரையில் வைத்தால் நிச்சயமாக சாப்பிடமாட்டான், நமது கைகளால் கொடுத்தால் உரிமையோடு நிம்மதியாக சாப்பிடுவான், இல்லையேல் சிறிய கிண்ணத்தில் வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சாப்பிடுவான், அவனுக்காக கிண்ணத்தில் வைக்கும் சாப்பாட்டை அவன் தனியாக சாப்பிடுவதில்லை அவனது உறவுகளான மற்றவர்களையும் சாப்பிட விடுவதில்லை, அவனது காதலி அனுவை எங்கிருந்தாலும் கத்தி கூப்பிட்டு அவனது காதலியோடு இணைந்து சாப்பிடுவதுதான் அவனுக்கு மிகவும் பிடித்த விஷயம், இதை கண்டு நானே பலமுறை மெய்சிலீர்த்து போயிருக்கிறேன். நான் பள்ளிக்கு செல்லும்பொழுதுகூட என்னை பிரிய மனமின்றி எனது மிதி வண்டியில் ஏறி அமர்ந்து கொள்வான், இறங்க சொன்னாலும் இறங்கமாட்டான் பிறகு அவனை வலுகட்டாயமாக இறக்கிவிட்டுவிட்டு நான் செல்வேன், அப்பொழுதும்கூட சிறிதுதூரம் எனது பின்னாலேயே வருவான், அவனது மேலான பாசத்தை என்னவென்று சொல்வது...???

ஒரு நாள் நான் காட்டிற்கு சென்று மாட்டுக்கு சோளத்தட்டை வெட்டி கட்டி தலையில் தூக்கிகொண்டு வந்து வீட்டு வாசலில் போட்டு துண்டு துண்டாக வெட்டிக்கொண்டு இருந்தேன், எனது அருகில் சகாவும் அவனது காதலி அனுவும் நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள், நான் ஒரு பிடிச்சை தட்டையை எடுத்து வெட்டிவிட்டு அடுத்த பிடிச்சையை அள்ள போனேன் உடனே சகா ஒரே கத்தாக கத்திக்கொண்டு ஓடிவந்து என்மீது ஏறி நான் அள்ளப்போன அந்த சோள தட்டைகுள்ளிருந்து ஒரு கட்டுவிரியன் பாம்பை கொத்தி இழுத்து எடுத்து போட்டு தனது கூர்மையான மூக்கு ஆயுதத்தால் கொத்து குதறி அந்த கட்டுவிரியன் பாம்பை கொலை செய்து என்னை காப்பாற்றினான், ஆனால் அவனை காப்பாற்ற என்னால் முடியாமல் போய்விட்டது.

அன்று நிறைந்த வெள்ளிகிழமை, சகா சாமிக்கு நேந்துவிட பட்டவனாம், அதானால் இன்று அவனை குலசாமிக்கு காவு கொடுக்க போகிறார்களாம்....
அப்பா இந்த விடயத்தை சொன்னதும் என் மனது பக்கென்று தூக்கிவாரி போட்டது, மனதில் துக்கம் வந்து குடிகொண்டது, சகாவை கொலை செய்ய போகிறார்களாம் அவனை எப்படி நான் காப்பாற்றுவது? மனதிற்குள் குழம்பி அழுதேன், கரை உடைந்த காட்டாறாய் கண்கள் உடைந்து வெள்ளப்பெருக்கானது கண்ணீர்,

அப்பா... சகாவை வெட்ட வேணாம்பா பாவம்பா அவன், அவனை விட்டுடலாம்பா... என்று அப்பாவிடம் அழுதுகொண்டே சொன்னேன்,
இல்லபா அது சாமிக்கு நேந்துவிட்டது நேர்த்திகடன் செய்யலன்னா சாமி குத்தம் ஆயுடும், நீ போய் புது சட்டை போட்டுக்கிட்டு கோவிலுக்கு கெளம்பு போகலாம் என்று அப்பா சொன்னார், மேலும் அழுகை அதிகரித்தது, எனது சகாவை கொலை செய்ய நான் புது சட்டை போட்டுக்கணுமாம், புது சட்டையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாமென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்,

அம்மா சகாவை வெட்ட வேணான்னு அப்பாகிட்ட சொல்லுமா, அவனையும் உன் பிள்ளை மாதிரிதானே வளர்த்த பாவம்மா சகா விட்டுட சொல்லுமா... அழுதுகொண்டே அம்மாவிடம் கெஞ்சினேன்,
இல்ல சாமி, அது சாமிக்கு நேந்துகிட்டது, நேர்த்திகடனை செய்யாம விட்டுட்டா தெய்வகுத்தம் ஆயுடும்பா... என்று என்னை பெற்ற எனது தெய்வம் இரக்கமே இல்லாமல் சொன்னது.

வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்கள், நான் சகா என்று அழைத்தேன் சகா ஓடி வந்தான், அள்ளி எடுத்து மார்போடு அவனை அணைத்து அழுதுகொண்டே அவனது சிவந்த கொண்டையில் முத்தமிட்டேன், தான் சாகபோகிறோம் என்றுகூட தெரியாமல் அவன் சிரித்தான்.

சகாவை தூக்கிகொண்டு வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்திற்கு சென்றேன், வைக்கோல் போருக்கடியில் அவனை விட்டேன், டேய் உன்னை கொல்ல போறாங்கடா போருக்கு அடியில போய் ஒளிஞ்சிக்க வெளியே வராத என்று அவனிடம் சொல்லிவிட்டு வந்தேன், அவன் எனது பேச்சை கேட்காமல் மீண்டும் என் பின்னாலேயே வெளியே வந்தான், எனக்கு கோபம் வந்துவிட்டது அவனை தலையில் ஒரு அடி அடிச்சி மீண்டும் வைக்கோல் போருக்கடியில் விட்டுவிட்டு வெளியே வந்த அடி பிச்சுபோடுவேன் போடா உள்ள என்று திட்டிவிட்டு வந்தேன், பிறகு அவன் அவன் வெளியே வரவில்லை.

வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு கிளம்பிவிட்டார்கள், எங்க சகாவை காணும் கூப்பிடு என்றார் அப்பா....
உடனே அம்மா சகா... என்று அழைத்தார்கள் அம்மா அன்பாக கூப்பிடுகிறார்கள் என்று வைக்கோல் போருக்கடியில் இருந்து இதோ வந்துடேம்மா... என்று கத்திகொண்டே ஓடிவந்தான் அந்த கிறுக்கு புடிச்சவன், நான் அவனை பார்த்து டேய் கிறுக்கு பயல நான் உன்னை போருக்கடியில் ஒளிஞ்சிருக்கதானே சொன்னேன் அப்புறம் ஏண்டா வந்த... உன்னை கொலை செய்ய போறாங்கடா, இது உன் அம்மா இல்லடா கொலைகாரி... என்றேன் நான் தெய்வமாய் வணங்கும் என் தாயை அவனிடம் காட்டி, ஆனால் நான் சொல்வதை எதையுமே கண்டுகொள்ளாமல் அவன் அம்மாவின் காலை சுற்றியே வந்துகொண்டு இருந்தான்,

அப்பா அம்மாவின் வர்ப்புருத்தளுக்கு பிறகு நானும் கோவிலுக்கு சென்றேன், அப்பா சகாவை தூக்கிகொண்டு சென்றார், இன்று ஏதோ விசேசம் போல் இருக்கிறது என்ற சந்தோசத்தில் சகா அப்பாவோடு சென்றான், அவனுக்கு எப்படி தெரியும்? விசேசமே அவனை கொலை செய்ய போவதுதான் என்று.....

நான் அப்பாவின் அருகில் சென்று... அப்பா வேண்டாம்பா சகாவை விட்டுடுங்கப்பா... பாவம்பா அவன், அவனை கொன்றால் நமக்கு பாவம்தாம்பா வந்து சேரும், புண்ணியம் கிடைக்காதுப்பா, எந்த சாமியும் நரபலி கேட்காதுப்பா, அப்படி கேட்டா அதுக்கு பேரு சாமியே கிடையாதுப்பா.... அவன விட்டுடலாம்பா என்றேன்...
பெரியார் பேரன் வந்துட்டான், பெத்தவனுக்கே அறிவு சொல்ல! எனக்கு எல்லாம் தெரியும் பேசாம வாடா என்று அப்பா சொல்லவே... சகாவை காப்பாற்றும் முயற்ச்சியில் மீண்டும் தோற்றேன்.

கோவிலில் பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் நடந்துகொண்டு இருந்தது, நான் சகாவை பரிகொடுக்கபோகிறோம் என்ற மேலோங்கிய வருத்தத்தால் ஒதுங்கி நின்றுகொண்டு இருந்தேன், எனது அருகில் கழுத்தில் மல்லிகைபூ மாலைபோட்டுகொண்டு கலர் கலராய் குங்குமபொட்டு வைத்துகொண்டு சகா நின்றுகொண்டு இருந்தான், நான் சகாவை பிடித்து தூக்கினேன் டேய் இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ சாகபோற என்னால உன்னை காப்பாற்ற முடியல, முடிஞ்சா தப்பித்து ஓடி போய்டு என்று அவனை தூரத்தில் தூக்கி வீசினேன், கிறுக்கு பயலுக்கு ரெக்கை இருந்தும் என்ன புண்ணியம்? பறந்து ஓடமாட்டேன்கிரானே..... இதை பார்த்த அம்மா இவனுக்கு கிறுக்கு பிடிச்சி போச்சி என்று என்னை சண்டை போட்டார்கள், சகா மீண்டும் என் காலடியிலேயே வந்து நின்றான்.

பூசாரி சூரி கத்தியை கையில் வைத்து கொண்டு, பலிபீடத்திற்கு அருகில் நின்றுகொண்டு காவுகொடுக்க போகிறோம் எல்லோரும் வாருங்கள் என்று கூறினார், உடனே அப்பா சகாவை தூக்கிகொண்டு பலி பீடத்திற்கு சென்றார், இதற்குமேல் என்னால் அங்கு நிற்க முடியவில்லை, மனம் கோவென கதறி அழுதது, என் சகா சாகபோவதை என் கண்ணால் நான் எப்படி காண முடியும்?

அதை பார்க்க மனமின்றி நான் கோவிலில் இருந்து வெளியேறினேன், எங்கப்பா போற இரு சாமி கும்பிட்டுட்டு போகலாம் என்று அம்மா சொன்னார்கள், நான் சாமியும் கும்பிடமாட்டேன் ஒன்னும் கும்பிடமாட்டேன் என்று சொல்லிவிட்டு நடந்தேன், அம்மா ஓடி வந்து என் கையை பிடித்தார்கள், என்னை விடு நான் போறேன் என்று அழுதேன், அம்மா என்னை விடவில்லை, அம்மாவின் பிடியில் இருந்து எப்படியோ திமிறி விடுபட்டு விலகினேன், அப்பொழுது பக்கத்தில் இருந்த இரண்டு பெரியவர்கள் என்னை பிடித்தார்கள், அவர்களின் பிடியில் இருந்து என்னால் விலக முடியவில்லை, பதினான்கு வயது சிறுவன் அல்லவா? என்ன செய்யா? விடுங்கடா கொலைகார சண்டாள பாவிகளா...என்று கூறி கதறி அழுதேன், எனது கதறலை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் என்னை விட்டுவிட்டார்கள்.

வேகமாக வீடு வந்து காயிற்று கட்டிலில் குப்புற படுத்து தலையணையை கண்நீர்கொண்டு நனைத்தேன், இந்நேரம் என் சகா செத்திருப்பான், அவனை வெட்டி கொலை செய்து இருப்பார்கள் என்று என்னும்பொழுது நான் தேம்பி தேம்பி அழுதேன், அன்று இரவெல்லாம் உறங்கவே முடியவில்லை சகாவின் நினைவுகள் உறங்கவேவிடவில்லை,

தினமும் தவறாமல் உறங்கிக்கொண்டு இருக்கும் ஊரை எழுப்பும் எனது சகாவின் குரல் அன்று கேட்கவில்லை, சூரியன் உதித்திருந்தாலும் இன்னும் விடியவில்லை என்றே உணர்ந்தேன்,

நான் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தேன், வேப்ப மரத்தடியில் அனு நின்றுகொண்டு இருந்தாள், நான் அவளை பார்த்தேன் அவள் சிறு சத்தம் போட்டவாறே என்னை பார்த்தால், அந்த சத்தமும் பார்வையும் எங்கே என் சகா என்று கேட்பதாகவே எனக்கு தோன்றியது, அன்று முழுவதும் அவள் அந்த வேப்பமரத்தடியை விட்டு நகரவே இல்லை, அவளுக்கு நான் சாப்பாடு கொடுத்தேன் அதையும் அவள் சாப்பிடவில்லை, மறு நாளும் அவள் அதே மரத்தடியில் நின்றுகொண்டு சகாவை தேடினாள், அவள் முகத்தில் தன் காதலனை காணவில்லையே என்ற பெரும் சோகம் குடிகொண்டு இருந்தது, உடல் சோர்ந்து இயக்கங்கலற்று அவள் இருந்தாள்.

பாவம் அவள், அவளிடம் எப்படி சொல்வேன் உன் சகா பல கயவர்களால் படுகொலை செய்யப்பட்டுவிட்டானென்று.

= = = = முற்றும் = = = =
குறிப்பு;. சகாதேவன் என்கிற ''சகா'' நான் செல்லமாக வளர்த்த எனது சேவல் கோழி.
''அனு'' எங்கள் வீட்டின் எதிர்வீட்டில் வசித்த பெட்டைகோழிக்கு நான் வைத்த பெயர்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (14-Jun-12, 2:52 pm)
பார்வை : 372

மேலே