நிலவில்லா இரவுகளில்
நிலவில்லா இரவுகளில்
இருட்டின் இன்பம்
முழுமை ஆகிறது....
வானமும்
மேகங்களும்
மேய்ப்பவன் இன்றி
தாவித்திரிய!
மொட்டை மாடியில்
கால்மீது கால் போட்டு
எண்ணுகிறேன் நட்சத்திரம்!
ரசிக்கிறேன்
விழுகின்ற எரிகற்களின்
இறுதி வெளிச்சத்தை!
ஒளி உதிர்க்கும்
மல்லிகை முல்லை மலர்களை!
இரவைக் கொண்டாட இணையை
அழைத்துத் துணைதேடும்
மின்மினிக்கு கொண்டாட்டம் தான்...
இன்றேனும் தான்
விடுக்கும் ஒளித்தூது
இணைக்குத் தெரியும் அல்லவா?
விடிவெள்ளி இன்று
விழா நாயகன்!
விசித்திர வெளி
இன்று
வசமாகிறது
தூங்கா விழிகளுக்கு!