என் சூரியோதயம் ......
உள்ளங்கைக்குள் உலகமாம்
எல்லாம் கணப்பொழுதினுள்
எத்தகைய பொய்யிது..!
எப்போதும் உன் நினைவான
தருணங்களுடனேயே இருப்பதால்
நினைவு சுழற்சிக்குள்
கனவுப் பொருளாகிக் காணாமலேயே
போகின்றேன்....
எனக்கும் உனக்குமான
இடைப்பட்ட பயணமோ
உயிர் துறக்கும் தூரம்
யார் அறிவார் இதனை?
நுனிப்புல் மார்கழியில்
பனித்துளியால் கொஞ்சப்படும்
அந்த அழகான காலையை
பார்க்கும் பொழுது - உன்
நேசத்தின் வாசம்
என்னை மெல்லமாய்
தழுவிச் செல்லும்....!
ஒவ்வொரு நாளும்
என்னை செதுக்கி வைத்து
சேமித்துக் கொண்டிருக்கின்றேன்
நீ வந்து நிற்பாய்....- ஒரு
சில வினாடிகளிலேயே
உன் இதழ் பிரியா புன்னகையில்
நான் மொத்தமாய் கலைந்து கிடப்பேன்...
நீ விதைக்கும் புன்னகையில்தான்
அன்பின் அகராதியை அறிகின்றேன்...
உன்னைப்பற்றிய தீராத நினைவுகள்
திமிறியபடி கிடப்பதால்
மறதிக்கு மார்க்கமின்றி அலைகின்றேன்......
என்னுடைய நேற்று மட்டுமல்ல
இன்றும் - நாளையும் கூட
நீயாகத்தான் இருப்பாய்....!!
நிலவொளிரும் இரவுகளில்
வடதிசையிலிருந்து
பாதி இரவுகளுக்கு அப்பால்
கண்விழித்து - நீ
எழுதுகிற கடிதங்களில் எல்லாம்
உன்
காதலைக் கொட்டித் தீர்த்திருப்பாய்!
அப்போதெல்லாம்
வடதிசையில் தான்
எனக்கு சூரியோதயம்....!!
அன்பே....
எவை கிடைத்தாலும்
எவற்றை இழந்தாலும்
பசிக்கு குட்டை நீரைக்குடிப்பதாய்
போக்குக்காட்டிய
காதல் மான்களாய்
விட்டுக்கொடுத்து வாழும்
நம் காதல் யாரிடமிருக்கு...!!??