பதின் வயதுகளின் "மரு"

எல்லா அம்மாக்களும்
அழகாய் எழுதி விடுகிறார்கள்....
"குழந்தை" என்னும் கவிதையை.
எந்தக் குழந்தைக்கும்தான்....
முழுதாய்ப் படிக்கும் பொறுமை இல்லை
"அம்மா" என்னும் கவிதையை.
******************************************************************
பதின் வயதுகளில்....
ஒரு மருவைப் போல்
பிறந்துவிடுகிறது "காதல்".
இரசாயனமோ....விஞ்ஞானமோ...
வெங்காயமோ....
நான் இருக்கும் வரை...
என்னை விட்டு வெளியேறாத சுவாசமாய்....
அது ஒட்டிக் கொண்டுவிட.....
அதை வெளித் தள்ளும் முயற்சிகளில்...
எனது அரைகுறை விருப்பங்கள்.
கடைசியாய்....
என்னை வெளியேற்றி விட்டுச்
சிரித்துக் கொண்டிருக்கும் அது....
எனக்குள்ளேயே அமர்ந்து கொண்டிருக்கிறது
சாவதானமாய்....
எதையும் அறியாத ஒரு பைத்தியம் போல.

பகிர்ந்தால்....காமமாகி விடும் அது...
பகிரத் தெரியாவிடில்...
கைக்கிளை ஆகி விடுகிறது.
எப்போதும்...
சிறகுகளுடன் பறந்துகொண்டிருக்கும் அதை...
யாருக்கும் தெரியாமல் கொல்வதுதான்
ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது
எனக்கு.
***********************************************************************

எழுதியவர் : rameshalam (19-Jun-12, 8:01 am)
பார்வை : 224

மேலே