நன்றி மலர்கள் பெருந்தலைவருக்கு !
தெருவில் விளையாடிய
சிறு பாலகர்களிடம்
" நேற்று என்ன செய்தீர்கள்?"
என்று வினவினார்
இலக்கணம் சொல்லித் தரும்
எங்கள் வாத்தியார் !
அவர்களோ -
"காத்தாலே எழுந்தோம் ;
கஞ்சி குடிச்சோம்
ராவு வரை
கடல் மணலாண்டே விளாண்டோம்!" என்றனர்
அப்படிச் சொல்லக் கூடாது
"காலையில் எழுந்தோம் ;
பழஞ் சோறு உண்டோம் ;
இரவு வரை கடல் மணலில்
விளையாடினோம் !"என்று
சொல்ல வேண்டுமென
வார்த்தைகளைத் திருத்தினார்
ஏட்டுக் கல்வி வாத்தியார் !
ஆனால்
"காலையில் எழுவோம்
பள்ளிக்குச் செல்வோம்
மதிய உணவு உண்போம்
மாலையில் விளையாடி
இரவினில் படித்த பின் உறங்கி
மறுபடியும் கல்வி கற்க
மகிழ்ச்சியுடன் காலையில் எழுவோம் !"
என்று வாழ்க்கையைத் திருத்தினார் !
ஒரு படிக்காத மேதை !
மதிய உணவுத் திட்டம் மூலம்
ஏழை வீட்டுப் பிள்ளைகள்
எழுந்து முன்னேற
எங்கள் முன்னே இருந்த
காமராசர் என்னும் பாதை !
(இன்று பெருந்தலைவரின் 110 ஆவது பிறந்த நாள் நினைவாக எழுந்த சிந்தனையில் விழுந்த நன்றி மலர்களின் சம்பர்ப்பணம் )