அப்பாவிற்கு ஓர் அஞ்சலி .....

ஆலமரத்திற்கும்
அழிவு வந்து விட்டது...
தாங்கிப்பிடித்த வேரோ
தளர்ந்து கிடக்கிறது....
அறுமலர்களோ அமைதியிழந்து
உதிரத் தொடங்கி விட்டன...
விளைந்த விழுதுகளோ
வீழ்ந்து கிடக்கின்றன....
விண்ணகம் செல்லத் துடிக்கும்
தந்தையே....
மண்ணில் நீயில்லாமல் எப்படி
நாங்கள்...?! - எண்ணும்போது
கண்ணில் கண்ணீரோ
கரை மீறுகிறது...
பாரபட்சமின்றி பாசம் காட்ட
பாடமெடுத்த ஆசானே...
பொறுமையும் பொறுப்பும்
நீங்கள் கற்றுத்தந்த பாடமே...
உழைப்பும் உண்மையும்
உங்களுக்கு உயிரென்றால்
எங்களுக்கு நீங்கள் தானே உயிர்...
உயிர் கொடுத்த உத்தமரே....
உம்மையிழக்க உள்ளம் இசையவில்லையே...
ஓய்வின்றி அயராது
வெயிலென்றும் மழையென்றும் பாராது
ஓடாய் உழைத்து எம் நலம் சேர்த்து
மகிழ்ந்த மாணிக்கமே...
சிறு பிள்ளையையும்
சேர்த்தணைத்து கருத்து கேட்கும்
கண்ணியமிக்க கருணையின் நாயகரே...
உம் காலத்திற்கும் எல்லை வந்துவிட்டதாமே...
எங்களின் ஆயுளை உம் எல்லைக்கு
பாலமாக்க பரம்பொருளிடம் வேண்டுகிறோம்
படைத்தவரே பரிசீலனை செய்யுங்கள்...
இனியொரு சென்மத்திலும் தாயுமானவரே
தந்தையாக தயங்காமல் அருள் செய்யுங்கள்...

எழுதியவர் : Premi (16-Jul-12, 2:13 pm)
சேர்த்தது : Premi
பார்வை : 144

மேலே