அவன் தோள் என்னைத் தாங்கட்டும் தோழி !

நாணக் கதவை
காமக் கோடரி
வெட்டி வீழ்த்திட
ஜாமம் கழிந்தும்
ஞாலம் உறங்கியும்
நான் உறங்கவில்லை தோழி !

அருகில் அவன் இருக்க
தவறுகள் தெரிவதில்லை
உருகிய பனிக் குழம்பாய்
அவன் ஓடி மறைந்ததும்
அவனைப் பற்றிய
தவறுகளன்றி வேறு எதுவும்
தெரிவதில்லை ஏன் தோழி ?

கண்ணுக்கு மையிடும்
குச்சியை கண்னென்று பார்த்தது ?
என் நெஞ்சுக்குள் மையலை
விதைத்தவன் எண்ணத்தை
இந்தப் பேதை என்றைக்கு அறிந்தது ?
அதனால்தானே -
சிரித்துக் கொண்டே
"போகிறேன்!" என்பவனை நானும்
ஒவ்வொரு இரவும் ஆமோதிப்பது!

தாயின் கண்களில்
ஐயம் தெரிந்தாலும்
தந்தையின் கவனத்தில்
போட்டுவிடமாட்டாள்!
அவன் வரும் வழியில்
நாய்கள் குரைக்கும்
அவதி மட்டும் இல்லையென்றால்
இன்றும் அவனை வரவேற்கலாம்
ஒருவரும் அறியமாட்டார் !

அலர் மூலம் ஊர் அறியும் முன்னே
அவன் வந்தால் நான் பிழைத்திருப்பேன்!
சிலர் மூலம் சிக்கல் வந்து
என்னைச் சிறையில் இட்டார் போல
வளைத்துவிட்டால்
அவன் இருந்தால் போதும்
அதை உடைத்தெறிவேன்!

ஆம் தோழி !

நீரோடை ஒன்று சென்ற
பாதையிலே நீரிருக்கும் என்று
கோடை காலத்திலே
குட்டியுடன் வந்து காத்திருக்கும்
யானைக் கூட்டத்தை
அதன் தாகம் கொண்ட பொழுதைப்
பயன்படுத்தி பாய்ந்து கொல்ல
பதுங்கியிருக்கும் புலிக் கூட்டம்
நிறைந்து கிடக்கும்
முத்து நாடனின் முல்லை நிலம்
நான் முறுவலுடன் செல்லும் இல்லம்
அவன் தோள் என்னைத் தாங்கி இருந்தால் !

(குறளின் இன்பத்துப் பாலையும் . சில சங்கச் செய்யுளையும் படித்து முடித்த போது முகிழ்த்த இன்பக் கிறக்கத்தில் எழுதியது )

எழுதியவர் : முத்து நாடன் (17-Jul-12, 11:37 pm)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 162

மேலே