பாடம் தந்தாய்! இளைய தீபமே!

ஸ்ருதி . .
ஏழு வயது இளைய தீபமே!
ஓடும் பேருந்தில் ஓட்டை இருக்க
ஓட்டை வழியாய் நீ
ஒழுகி விழ
உதிரம் தெறிக்க
உயிர் துறந்தாயே மகளே!

வானவில் போல
வண்ணக் கனவாகி போனவளே!

உன் மரணம்
ஒரு உண்மை சொல்கிறது.
இங்கே பேருந்தில் மட்டும்
ஓட்டை இல்லை.
பேனா பிடிக்க
கற்றவன் மனமெல்லாம்
சல்லடையாகிவிட்டது.
லஞ்சத்தை
சலிக்கத் துவங்கிவிட்டது.

அம்மை அப்பனுக்கெல்லாம்
ஆங்கில மோகம்.
மெட்ரிக் பள்ளி
சொப்பனம் விற்கும்
கற்பனை கூடம்.
தொண்டை இல்லாதவனின்
அபசுர ராகம்.
தெருவில் கூவி
கல்வி ஒரு வியாபாரம்
வலி தெரியாமல்
ரத்தம் சுரண்டும்
விற்பனை உத்தி.
எத்தனை காலம் தான்
இந்த வியாபார புத்தி?

கல்வி என்பது
பிறப்பின் உரிமையாம். . .
அறுபது ஆண்டுகள்
தூங்கிய பின்னர் தான்
அண்மையில் விழித்து
அவசர கோலத்தில்
சட்டம் செய்தோம்.

ஆனால்!
பள்ளி வாசலில்
யாசகம் கேட்டோம்.
பாராமுகமே பரிசாய் வந்தது.
மனுக்கள் போட்டோம்
வினாக்கள் மட்டுமே
விடையாய் வந்தது.

விடை கிடைக்குமென்று
அடை காத்திருந்தோம்
சிறகின் இடுக்கில்
சிலந்திக் கூடு.
பிறகு தான் தெரிந்தது
அடைகாத்தது
பெட்டையுமில்லை
சிறகிற்குள் எந்த
முட்டையுமில்லை.

பொறுத்தது போதும்
பூக்களை எல்லாம்
தீக்கிரையாக்குதல்
என்பதை இனியும்
பொறுப்பதற்கில்லை.

கல்விக் கூடங்கள்
தனியார் கையில்
டாஸ்மாக் மதுக்கடை
தன்னுடை கையில்
அடடா! இது
ராஜாங்க ரகசியம்.

அரசாங்கமே!
நம்பிக்கை என்பதை
வீட்டுக்குள் விதை.
நடந்து போகும் தூரத்தில்
கல்வி கொடு!
மனச்சாட்சி உள்ளவனுக்கு
வேலை கொடு.
லஞ்சம் கேட்பவனை
அன்றே சிறைலிடு.
ஆயுள் உள்ளவரை
அவனை
அங்கேயே இருக்கவிடு.

எழுதியவர் : மோசே (26-Jul-12, 11:51 pm)
பார்வை : 304

மேலே