கிராமியத்தில் இயற்கையின் சங்கீதம் !

மலைப்பாதை நடக்கும் போது
மரம் தாவும் மந்திகளால்
கிளை முறியும் ஓசை
கிலியூட்டும் சங்கீதம்...!
மணிக்கணக்கில் பார்த்திருந்து
மனம் வெறுத்துப் போகையிலே
தொலைதூரம் கேட்கும் அந்த
பேரூந்தின் உறுமல் சந்தோஷ சங்கீதம்...!
மழைச்சாரல் வீசுகையில்
வயல் வரப்பில் வழிந்தோடும்
நீரோடையின் சலசலப்பு
மெய்சிலிர்க்கும் சங்கீதம்...!
குன்றுகளைத் துளைத்துக்கொண்டு
குகை வழியே கூச்சலிட்டு
கூவிச் செல்லும் ரயில் சத்தம்
இராட்சத சங்கீதம்...!
கனத்த மழை அடிக்கும் போது
தகரக் கூரையில் தாளம் போடும்
தண்ணீர்த் துளிகளின் சத்தம்
மதி மயக்கும் சங்கீதம்...!
குயில் பாடும் பாட்டுக்கு
காட்டிடையே கோரஸ் பாடும்
குருவிகளின் குரலோசை
கும்மாள சங்கீதம்...!
மாலை நேரம் ஆகும் போது
காட்டு மல்லி வாசத்தோடு
கலந்துக்கொள்ளும் தவளை சத்தம்
மயங்க வைக்கும் சங்கீதம்...!
ஊருரங்கும் வேளையிலே
யாருமற்ற ராத்திரியில்
ஓநாயிடும் ஊளைச்சத்தம்
பயமுறுத்தும் சங்கீதம்...!
ஆற்றோர மூங்கில் தோப்பில்
வண்டிட்ட துளைவழியே
தென்றல் பாடும் தேசியகீதம்
பரவச சங்கீதம் !
வைகறைப் பொழுதின்
பனிக்காற்றில் நனைந்தப்படி
விட்டில் பூச்சியின் ரிங்காரம்
களிப்பூட்டும் சங்கீதம்...!