நான் ஒரு நிலா ரசிகன்

நெஞ்சக் குளத்தில்
எறிந்த கல்
நினைவலைகள் எழுப்பும்...

ஒற்றை நிலவாய்
எனக்குச்
சொந்தமான வானில்
அவள் மட்டும் உலவுவாள்...

ஊருக்கும் தெரியாமல்
யாருக்கும் புரியாமல்
அந்த நிலவை ரசிக்கும்
ஒற்றை ரசிகன் நான்...

இந்த
நிலவு ரசிகனுக்கு மட்டும்
நீண்ட இரவும்
சுருங்கித்தான் தெரிகிறது...

நிலவு வருவாள்...
என் நித்திரை பிடுகுவாள்...
என் கண்கள் நோகினும்
அவளை
காணச் சொல்லுவாள்...

கரைகிற இரவு முழுதும்
அவளோடு
கண்ணா மூச்சி....
விடாமல் துரத்துவோம்...
நானும்
என் விழிகளும்...

நிற்காமல் ஓடுவாள்...
மேகங்களுக்கிடையே
ஒளிந்துகொள்வாள்..

மறைந்திருக்கிறாளென்று
தெரிந்தும்
அவளைக்காணாத
அந்த அரைநொடியில்...
மனசு துடிக்கும்...
மௌனம் வெடிக்கும்...

வலக்கையில் ஏந்தி நிற்பேன்..
அவளுக்காகவே
என் வீட்டுத்தோட்டத்தில்
நான் வளர்த்த ரோஜாவை..

அவளோ... இது
தேய்பிறைக் காலமடா
என்று ஏளனம் செய்வாள்...

பௌர்ணமியாய்
அவள் முகம்
பள பளக்கையில்..
நான்
பஞ்சுகொண்டு போவேன்...

மேக நுரைக்குள்
நழுவிய சோப்பாக மறைவாள்...

எனக்கென்று யாருமில்லை
என்னைத் தேற்ற...

விழிகளில் வழிந்திடும்
நீரினைத் துடைதுவிட்டு...
என்ன நானே தேற்றிக்கொள்வேன்...
நாளை தேய்பிறையல்லவா?

என்றைக்கேனும்
இரவில்
இடியோடு மழை பொழிந்தால்
கண்டுகொள்ளுங்கள்..

மேகச் சிறைக்குள்
சிக்கிக் கொண்ட
அவளைக் காணாமல் - நான்
கண்ணீர் வடிக்கிறேனென்று....

எழுதியவர் : நெல்லை மணி (19-Aug-12, 10:18 pm)
சேர்த்தது : நெல்லை மணி
பார்வை : 165

மேலே