சிசு ஆத்மாக்களின் குமுறல்கள் !

கருவறைக்கு வெளியே
கல்லறை என்ற
கலியுகத் தீர்ப்பில்
கருகிய மலர்கள் நாங்கள் !

தாய்ப்பால் காண
தவமிருந்து வந்தோம்
கள்ளிப்பால் தந்த
விஷவிருந்து உண்டோம் !

அகவைக் கூட
அகரம் எழுதவில்லை
ஆகாரமாய் நமக்கு
ஆலகால விஷமா ?

தொட்டில் தாலாட்டுக்குத்
துடித்தோம் நாங்கள்
குப்பைத் தொட்டியின் - தாலாட்டில்
துடிக்கவில்லை நாங்கள் !

தாலியில்லா தம்பதிகளின்
வேலியில்லா வீம்புகளால்
தப்பு செய்த பாவத்துக்கு
நம் உயிரா வெகுமதிகள்?

உங்கள் உணர்ச்சிகள்
எதற்குத் துடித்தது
எங்கள் உயிர்களா
அதற்குக் கிடைத்தது ?

அழுதுக்கொண்டே பிறந்த நாங்கள்
கவலைக்காக அழவில்லை
கழுத்து நெரித்துக் கொன்ற போது
கதறக்கூடத் தெரியவில்லை !

வாழ வழி இல்லையென்றால்
கிடைக்கும் வரை பொறுக்கலாமே ?
குரல் கேட்ட மறுகணமே
குரல்வளையை நெரித்ததேனோ ?

சந்தோசமாய் இருக்க யாரோ;
கருவறைக்கு நாங்கள் வந்தோம்
மூச்செடுக்கத் தொடங்கும் போது
மாத்திரையால் செத்துப்போனோம் !

உடல் கூட வளரவில்லை
உயிர் பிரிக்க உத்தரவோ ?
எவனோ செய்த பாவத்துக்கு
எமனுக்கு நம் உயிரா?

பாவையாக பிறந்தது
நாம் செய்த பாவமா?
மூடர்களின் நம்பிக்கைக்கு
நம்முயிரா காணிக்கை?

மண்ணுக்குள்ளே சடலமாகி
மண்ணுக்கு உரமானோம்
மதிக் கெட்ட மானுடமே
இது என்ன அவமானம் ?

மறு ஜென்மம் எடுக்க எம்மை
விரைவாக அனுப்பினாயோ
விரைந்து நாங்கள் மீண்டும் வந்தால்
விடியல் தர நினைப்பாயோ?

ஆணாகப் பெண்ணாக
இல்லையென்றால் அலியாக
மறு பிறவி எடுத்து வந்தால் -
தாய்ப்பால் தந்தெம்மை
தாலாட்ட நினைப்பாயா?

இல்லை...

இழி செயல்கள் செய்தெம்மை
இன்னும் இன்னும் கொல்வாயா
கொல்வதென்றால் சொல்லிவிடு
மிருக வயிற்றில் பிறந்திடுவோம் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (26-Aug-12, 1:06 pm)
பார்வை : 284

மேலே