நடுக் கடலில் தமிழக மீனவர்கள் நிலைமை...
பசிக்கும் வயிற்றை நிரப்ப வேண்டி -கடலில்
சென்று உழைத்தோம்
புசிபதற்கு கிடைத்த மீன்கள்
கொழும்பு படகில் பயணம்
தமிழகத்தான் பிடித்த மீன்கள்
இலங்கை வீட்டில் சமையல்..-அதை
தட்டி கேட்க ஆளில்லாமல் -ஒரு
தலை குனிந்த வாழ்க்கை...ஒரு
தலை குனிந்த வாழ்க்கை...
சிங்களத்தான் எங்கள் மீது- தினம்
சினம் கொண்டு தாக்குகிறான்
சிங்கிவனோ வாயை மூடி-அங்கே
சிரித்து உதவி செய்கிறான்...
பாரதத்தாய் பெற்றெடுத்த
கடைக்குட்டி பிள்ளைகளை -அவன்
பாவம் என்றும் பார்க்காமல்
படகை உடைத்து கவிழ்க்கிறான்...எங்கள்
படகை உடைத்து கவிழ்க்கிறான்
மாடு போல உழைக்கும் நாங்கள்
மதிய சோறு உண்ணல...
நாய விடக் கேவலமாய் -எங்களை
நடுக்கடலில் சுடுகிறான்...
மாண்புமிகு மந்திரிகள் மனசு எங்க போச்சோ...?
மனித வாழ்க்கை அவங்களுக்கு
குருவிபோல ஆச்சோ...?
மந்திரிகள் சொல்வதெல்லாம்
மக்கள் எங்க மூச்சு...
மனிதாபி மானமின்றி
உயிர் நடுக் கடலில் போச்சு...எங்கள்
உயிர் நடுக் கடலில் போச்சு...
பெத்தவங்க பெண்டு பிள்ளைய
குடிலில் விட்டுப் போறோம்..
போன நாங்கள் திரும்பலனா
எங்கள் குடும்பம் என்ன ஆகும் ..?
ஓட்டுகேட்கும் போது யெங்க
கால கழுவிக் குடிச்சவன்
உரிமை கேக்க நாங்க போனா-அவன்
வீட்ட பூட்டி ஓடுறான்....அவன்
வீட்ட பூட்டி ஓடுறான்....
போராட்டம் நடத்துறேன்னு-சிலர்
பொய்வேஷம் போடுறான்
பாராட்டு மாலைகளை-தினம்
பல்லைக்காட்டி வாங்குறான்..
பேசி சிரித்து சென்ற நாங்கள்
பிணைக் கைதியாய் ஆனோமே
வலையறுத்து குலயறுத்து
வாழ்வறுத்துப் போனோமே...நாங்கள்
வாழ்வறுத்துப் போனோமே
நாங்கள் விட்ட கண்ணீர் ஓலம்-தினம்
நடுகக் கடலில் சுற்றுது..
நாதி இல்லா எங்கள் வாழ்வில்
நீதி சொல்ல எவருண்டு...?
மீனவனா பிறக்க நாங்கள்
என்ன பாவம் செஞ்சோம் ..?
மீட்டுத்தாங்க தயவு செஞ்சு
எங்க உயிரை கொஞ்சம்...!
மீட்டுத்தாங்க தயவு செஞ்சு
எங்க உயிரை கொஞ்சம்...!
-பசுவைஉமா...