என்ன பெத்த மகராசி......

பொறந்து ஒருமணி
====நேரம் ஆகுமுன்னே
இறந்து போகத்தான்
====விதிநெருங்கி வந்தமகன்!


மருத்துவச்சி எடுக்கையில
====கைநழுவி விழுந்ததில
மண்டையில அடிபட்டு
====மரணம்வரை போனமகன்!

"இதயத் துடிப்பெல்லாம்
====இறங்கிப் போயிருச்சி
இதுயினி பிழைக்காது"
====டாக்டர்கை விட்டமகன்!

முப்பது ரூபாய
====முழுசா நீட்டிவிட்டு
இப்பவே பொதச்சிருன்னு
====பெத்தவனும் சொன்னமகன்!

ஆண்பிள்ளை ஆச்சே!நு
====அழுத உன்தாயி
புலம்பிய புலம்பலால்
====பூமிக்கு மீண்டமகன்!

அழகுத் தமிழுக்கு
====ஆணி வேரான
பழநிவேல் முருகனருள்
====பட்டதனால் பொழச்சமகன்!

கரண்டுல வச்சிருந்து
====ரெண்டுநாள் போராடி
எமனோட பாசக் கயிறு
====அறுத்தெறிஞ்சி வந்தமகன்!

"என்னோட பிள்ளைக்கு
====என்னாச்சி சொல்லுங்க"
பெத்தவளே! நீபுலம்ப
====பக்கம்வந்து சிரிச்சமகன்!

ஒன்னுரெண்டு முறையில்ல
====வருஷத்துக் கொருதடவ
கண்ணாமூச்சி ஆடியாடி
====சாவுக்கும் சலிச்சமகன்!

அஞ்சாறு வயசுல
====கைகால் விளங்காம
திருநீறால் உடல்கழுவி
====திடமாக எழுந்தமகன்!

தேனா தமிழெடுத்து
====கவிஎழுதப் பொறந்தமகன்!
ஆனாலும் உன்ன
====அழவைக்க வந்தமகன்!

கொல்லப் பொறந்தவன
====கண்ணுக்குள் தினம்வச்சி
செல்லப் பிள்ளையின்னு
====செல்வாக்கா வளர்த்தவளே!

ஈயொன்னு என்மேல
====மொச்சாலும் நெஞ்சோட
ஈட்டிவந்து பாஞ்சதுபோல்
====துடியாகத் துடிச்சவளே!

விதிய வெறகாக்கி
====அடுப்பெரிச்சி வந்தவளே!
என்ன பெத்த மகராசி
====என்ன சொல்லி நானெழுத?

ஏட்டுல உன்னபத்தி
====எழுதாம போனாக்கா
தீட்டில்ல பட்டுவிடும்
====தங்கமகன் எழுத்தெல்லாம்?

உன்வயித்தில் பொறக்கத்தான்
====நான்செஞ்ச புன்னியமென்ன?
என்னவயித்தில் சொமக்கத்தான்
=====நீசெஞ்ச பாவமென்ன?

மகனா நீயென்ன
====வயித்தில் சொமந்ததுக்கு
மலடியா இருந்திருந்தா
====மனச்சொமையும் உனக்கேது?

சுடுகாடு மட்டுமுன்ன
====தோளில் சுமக்கவா
பிள்ளைஒன்னு வேணுமின்னு
====பாவியென்ன பெத்தெடுத்த?

லட்சியம் பெருசுன்னு
====பெத்தவளே உன்னையும்
லட்சியம் செய்யாம
====ஒதுக்கிவிட்டு வந்தாலும்,

கனவில்நான் அழுதாலே
====கதறிஎழும் தாயுன்ன
நனவுல அழவிட்டு
====நெடுந்தூரம் வந்தாலும்,

மாரூட்டி வளத்தவுன்ன
====மனசொடிய விட்டாலும்
சோறூட்டி வளத்தவுன்ன
====சோதிச்சி நின்னாலும்,

பாசம் இல்லாத
====பாலைவனம் நானின்னு
பேசாத ஒருசொந்தம்
====பெத்தவளே நீதானே?

தூக்கி எறிஞ்சிநான்
====தூரம் போனபின்னும்
தூக்கிவச்சிப் பேசுகிற
====தூயவளும் நீதானே?

"கல்லாகிப் போகவில்ல
====கருவில்நான் சொமந்தமகன்
செல்லாத காசில்ல
====சாதிக்கப் பொறந்தமகன்"

இந்த வார்த்தைகள
====இனியவளே நீசொல்லும்
அந்த நேரமெல்லாம்
====அடிநெஞ்சு கதறுதம்மா!

தொண்டையில கட்டிவந்து
====ஆப்பரேஷன் செஞ்சிவந்து
தண்ணீரும் எறங்காம
====தாய்நீ தவிக்கையில,

"தலைச்சமகன் பாக்காம
====தலைகுனிஞ்சி போறான்டா
அடுத்தமகன் நேரமில்ல
====பாப்போம்னு சொல்றாண்டா"

பேச முடியாம
====எனக்குநீ சொல்லியழ
அடக்க முடியாம
====அழுதபடி நானும்வர,

"என்னதான் இருந்தாலும்
====எனக்கு ஒண்ணுன்னா
ஓடிவரும் ஒத்தமகன்
====இவன்போல எந்தமகன்?"

கண்ணீர் விட்டபடி
====பெருமையா சொன்னவளே!
மண்ணில்நான் புதஞ்சாலும்
====உன்னைநான் மறப்பேனா?

முகம்வாடி நான்நின்னா
====மனம்வாடி நீநிப்ப
மனம்வாடி நீநின்னா
====முகம்வாடி நான்நிப்பேன்!

ஊருக்குப் புரியாம
====போனாலும் என்மனசு
உனக்குப் புரிஞ்சிருக்கே
====உத்தமியே அதுபோதும்!

முத்தமிழ்க் கவியாக-நான்
====முடிசூட ஆசவைக்க
மூக்குத்தி அடகுவச்சி
====போய்வான்னு சொன்னவளே!

நாளைக்கு சாதிச்சி
====நானுயர்ந்து நின்னாலும்
வேளைக்கு ஊட்டிவிட
====உன்னவிட்டா யார்வருவா?

தங்கக் கரண்டியில
====தினம்நான் தின்னாலும்
வாய்க்கரிசி போலல்லோ
====வாயுணரும் வயிறுணரும்?

மேடையெல்லாம் மாலைபோட்டு
====மேதையின்னு புகழ்ந்தாலும்-அதுஎன்
பாடையிலே பூச்சரம்தான்
====பெத்தவநீ இல்லேன்னா!




------------ரௌத்திரன்

எழுதியவர் : ரௌத்திரன் (7-Sep-12, 2:35 pm)
சேர்த்தது : ரௌத்திரன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 324

மேலே