நிச்சயதார்த்தம்

ஒரு காலம் வக்கின்றி, திக்கின்றி
அலைந்த நான்,
ஒருக்காலும் மறக்க மாட்டேன்
மாசகற்றி வழி சமைத்த உன்னை....
திசையில்லா ஓடம்
கரையில் ஒதுங்கியது.
காட்டாற்று வெள்ளம்
கடலில் அடங்கியது.
பொலிவுற்ற வரனொன்று
தெளிவுற்றது.
எல்லாம் உன் வருகையில்தானே!
நினைத்தும் பார்க்கா
தருணமது,
நீ வந்து என் முன்னே
தலைகுனிந்து சிலையாக,
உணர்வுகளை எனக்குள்ளே
உசுப்பிவிட்ட நாழிகைகள்...
உறவுகூடி பேசி நிற்க,
உயிர் துளைத்து சுரப்பிகளை
உன் பார்வை உரசிச்சென்றது.
பயிரொன்று எனக்குள்ளே
வேர்விட்டு துளிர்த்தது.
உன்கையும், என்கையும்
இணைந்து நின்று வாக்குரைக்க
சொர்க்கத்தில் நிச்சயித்த உறவொன்றை
சொந்தங்கள் தேடி கரம்சேர்த்தன.
சுமைகள் எல்லாம் ஒழிந்துகொள்ள
உன் இமைகள் வாளேந்தி வந்து,
தோள் சேர்ந்த கைகளில் துணிவு தந்து,
தேரேற்றி என்னை இழுத்துச் சென்றாய்
பயணங்கள் இன்னும் தொடர்ந்திடுதே...
வாழ்க்கைப்பள்ளியிலே
அரிச்சுவடி மாணவர்களாய்
நீயும், நானும் நாணிநிற்க,
நாற்புறமும் இருந்துவந்த
நயமான வார்த்தைகள்
நம்மிருவர் மனங்களில் பதித்த
பாடங்கள் இன்னும்
பசுமரத்தாணியாய்....