மண(ன)முறிவு - கே.எஸ்.கலை

நீதியில் எழுதிய தீர்ப்பொன்று
பாதியில் முடிந்தது வாழ்வொன்று
காதலில் வளர்த்த உறவொன்று
காணாமல் போனது எனக்கின்று !
அந்தம் கண்டது பந்தம்
அறுந்துப் போனது சொந்தம்
துடித்து நொறுங்குது நெஞ்சம்
தனிமையில் துடிக்குது மஞ்சம் !
விளக்காய் இருந்த உறவொன்று
விட்டிலை எரித்த கதையிங்கு
கட்டிலும் தொட்டிலும் இழந்துவிட்டு-வாழா
வெட்டியாய் எனக்கொரு வாழ்விங்கு !
விரக தாபம் எனக்கில்லை – நீ
விரும்பா ஆசை எனக்கில்லை
விட்டுக் கொடுக்கத் தெரியாமல்
கெட்டுப் போனது வாழ்வொன்று !
இருவர் இணைந்து ஒன்றானோம்
இருவர் இணைந்து மூன்றானோம்
ஒருவர் எழுதிய தீர்ப்பாலே
துண்டு துண்டாய் நாமானோம் !
கனவுகள் ஆயிரம் இருந்தது
கல்யாண வாழ்வும் அமைந்தது
கட்டிய தாலி அறுந்தது
கண்ணிய வாழ்க்கை இறந்தது !
உப்பில்லா சமையலில் கூட
தப்பொன்றும் சொன்னதில்லை
தப்பெல்லாம் செய்து விட்டு
தண்டனையை தந்து போனாள்!
தூளியில் ஆடிய பிஞ்சைக் கூட
தூக்கிக் கொண்டு போய்விட்டாள்
வேலியாய் இருந்த எனை விட்டு
வேதனை கொடுத்துப் போய்விட்டாள் !
பத்திரப் படுத்த நானிருந்தேன்
பத்திரம் கொடுத்து பிரித்தாளே...
சமுத்திரம் போல கண் சொரிய
தரித்திரம் தந்துப் போனாளே !
சாமியறை சமையலறை
கட்டிலறை குளியலறை
அத்தனையும் நிறைத்திருக்கும்
கறைப் படிந்த நினைவலை !
சோப்பு நீரும் கண்ணீரும்
சேர்ந்தே துவைக்கும் என் ஆடை;
உண்ட உணவும், கண்ட கனவும்
சேரவே இல்லை என் வாழ்வில் !
உற்ற துணையும் இல்லாமல்
பெற்ற சேயும் இல்லாமல்
கற்ற பாடம் கசக்கிறது
கயிற்றில் தொங்குது என் வாழ்வு !
புரிந்து வாழ்தல் இல்வாழ்வு
பிரிந்து போவது இழிவாழ்வு
திரும்பிப் பார்க்க முடியாமல்
குழம்பிப் போனது என்வாழ்வு !