களமுனை வாழ்வை காகிதங்களில் வாக்குமூலமாய் தரமுடியாது

அந்த நாளுக்கு பின்
இன்று வரை
எதுவுமில்லை,

வெளிச்ச வெளிகளாய்
என் கால் தடங்கள்
பதிந்த,
எதுவுமே இன்று சுயத்துடன் இல்லை.
அந்த நாளுக்கு பின்
இன்று வரை
எதுவுமில்லை. . .

நெருஞ்சி முள்ளின் ஏறலாய்
மனமெங்கும்
குத்தியபடியே ரணமாயிருக்கிறது,
நான் கடந்து
வந்த உறவுகளின் பிணக்குவியல்!

அன்றைய அந்த நாளின்
என் கடைசிக்
களமுனை வாழ்வை,
காகிதங்களில் வாக்குமூலமாய் தரமுடியாது .

மிஞ்சுமா?
பகையின்னும் என்கிற இறுமாப்பு
அன்று மட்டுமல்ல,
என்றுமேயிருக்கும்.

அன்றைய
தோல்வியின் காரணம் குறித்து
ஆய்வுகள் செய்யட்டும்,
அவரவர் பாணியில் !

"இவர்களின் விதண்டாவாதம் தோற்றுவிட்டது
இவர்கள் நினைப்பது என்றுமே நடக்காது"வென
எலும்புக்காய் தூங்கும்
இனத் துரோகிகள் புலம்பி திரிவது,
விடுதலைக்காய் உயிர் விடும்
புனிதத்தை
என்ன செய்து விடும் ?

"நடக்க நினைத்த பாதையை வேறாக
மாற்றியிருந்தால்
இதே நிலைமை
கனவிலும் வந்திருக்காதென"
களம்புகப் பயந்த வீரியமில்லாதவரின் விமர்சனம்.
கவுண்டமணி நகைச்சுவை .

தீய சக்திகள்,
சரியான பார்வையில்லை,
ஒன்றை உடைத்து ரெண்டாக்கப் பார்க்கும்
பிரிவினை வாதிகள்.
பிணமாகி விட்டதாய்
மேலாதிக்க பத்திரிக்கைகள்
பத்தியெழுதின . . !


உலகமே !
எம் குருதியாற்றின்
ஆழத்தை இன்னுமின்னும்
பெரிதாக்க வேறு வழி தேடினர்.


கடல் பிரித்திருந்தும் தொப்புளால்
இணைந்திருக்கும்,
மானமுள்ள உறவுகள்,
எங்களோடு இல்லையேயென வருந்தினர்.

எதை
எவ்வழியில்,
எப்படி செலுத்தினால்,
பகைக்கு
வலிக்குமென
சரியாய் கணிக்கும்
வல்ல வலிமையுள்ளதெமக்கு. . !

விடியும் வேளையெல்லாம்
களம் விரையெனச் சொல்லும்
வீட்டிலிருந்து
வீணாய்
வீழ்ந்து போன பிணங்கள். . .

ஒன்று மட்டும் உறுதி !
கல்லறையில் தெய்வங்களிருக்கும்
தேசத்தில்
கருவறைக் கடவுள்களுக்கு
வேலையில்லை . . .
அற்புதம் எங்களால் மட்டுமே
நிகழ்த்தப்படும்.

இறுதிவரை வெளிவராத உண்மைகளில்
காலம் களவு போவது
ஏற்புடையதல்ல,
எழுவோர் எழுக !

நேரமவர்க்கு தெரியும்
வரும் வேளை வருபவர் வரட்டும் !
அவன்
நடந்த வழியை உன் பாதம் தொடரட்டும்,
விரைக
விடுதலை அடைக!

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (18-Sep-12, 3:24 pm)
பார்வை : 200

மேலே