கடவுளுடனான விவாதத்தின் விளைவு

விடியாத இரவுக்குள்
தொலைந்து போனது
முடிந்துவிட்ட வாழ்வு

ஏன் இந்த வரம்
என்றே இறைமீது
என் கோபம்

எனக்கும் அவனுக்கும்
சின்னதொரு விவாதம்
நான் கேள்விகளோடும்
அவன் பதில்களோடும்


நான்*
என் மரணம்
இப்படியே என்று
நீ செய்த விதியோ ?

கடவுள்*
பிறவி எடுத்த போதே
பின் தொடரும்
மரணம் உன்னை
உணராது உளறாதே

நான்*
அன்போடு என்னை
அரவணைத்த அன்னை
பண்போடு வளர்த்த
மாண்பான தந்தை
என்னைப் பிரிந்து
வேதனையுற
பரிவு இல்லையோ
ஏன் இந்த பிரிவு ?

கடவுள்*
அவர்களும் மனிதர்களே
அவசரமாய்க் கேட்கிறாய்
அறிவற்றுப் போனாயோ

நான்*
கடமைகள் விட்டு
கடவுள் தேடி வந்தேனே
கட்டாயம் இந்த மரணம்
சரியா ?

கடவுள்*
வாழ்ந்த வரை
என்ன செய்தாய்
வருந்திட இங்கே
வந்துவிட்டாய்

நான்*
இந்தப் பேதைக்கு
மீண்டும் வாழ
வரமொன்று தருவாயோ ?

கடவுள்*
மறுஜென்மம் உண்டு
மலர்ந்திட வரமுண்டு
மறுப்பில்லை எனக்கு

நான்*
இழந்த என் பெற்றோருக்கே
மீண்டும் மகளாக வேண்டும்
நீண்ட ஆயுளும் வேண்டும்
அருள் செய்திடுவாயோ

கடவுள்*
அப்படியே ஆகட்டும்
அதுபோலே நடக்கட்டும்


மீண்டும் ஜென்மம்
என் ஆசை நிறைவேற
பிறந்துவிட்டேன்

அப்பன் குடிகாரனாய்
அம்மா அற்ப ஆயுளோடும்
சிதைந்துபோன கனவுகளோடு
இறைவனை வேண்டினேன்
இனியொரு பிறவி வேண்டாமென !!

எழுதியவர் : (23-Sep-12, 7:40 pm)
பார்வை : 239

மேலே