தாத்தாவின் கைத்தடி

அழகுக் குழந்தைக்குத் துணை
அன்னை முந்தானைக்குள் அமுதின் வாசம்....

அடுத்து சில வயதுகளில் துணை...
அழகாய் சிரித்து மகிழ சின்னவண்ணபொம்மைகள்

அடுத்த சில வயதுகளில் துணை....
அன்பாய் நட்பு பாராட்டும் பள்ளி நண்பர்கள்....

அரும்பு மீசை முளைக்கையில் துணை
அழகுப் பெண்களின் காதல் பார்வை.....

அரணாய் வாழ்வு அமைய துணை
அறிவோடு வருகின்ற வாழ்க்கைத் துணை

அதன் பிறகு வரும் அனைத்துக்கும் துணை
அசைக்கமுடியாத தன் மீதுள்ள நம்பிக்கை முயற்சி

அடங்கி முடிய முதுமையில் துணை - பிள்ளைகள்
ஆசையாய் வாங்கிக் கொடுத்த கைத்தடி....

கைத்தடி வளைவுகளில்
கை வைத்து வெறித்துப் பார்க்கிறேன் அதை......

என் இளமையில் தடவிய காதலியின் தலையோ ?
என் இனிய நண்பனின் ஒல்லியான தோள்களோ ?
என் கூன் விழுந்த முதுகின் மாதிரித் தோற்றமோ ?

எது எப்படியோ ?

இதை வைத்துக் கொண்டு இப்போது நடக்கிறேன்...

இது ஒன்றே
இப்போதைக்கு எனக்கு நம்பிக்கை கொடுக்கிறது...!

கண் சரியாகத் தெரியவில்லை.......

சுவற்றில் சாத்தி வைத்திருந்த
கைத்தடியை நான் தடவி தேடுகையில்

என் கைகள் பட்டு அது கீழே விழுகிறது.........

ஐயோ என் செல்லம்
அடி பட்டிடுச்சா ?

ஒரு குழந்தையை கொஞ்சும் லாவகத்தோடு

அந்தக் கைத்தடியை மார்போடு அணைக்கிறேன்...!

எழுதியவர் : (4-Oct-12, 11:05 pm)
பார்வை : 238

மேலே