பிதாவே வராதீர்
கல்லைத் திருடி –
கரன்சி எண்ணியவர்கள்,
கம்பி எண்ணிக்
கரைந்து போவாரா ?..
இல்லையேல் –
சட்டம் வளைத்து -
விட்டதைப் பிடிப்பாரா ?
• * *
ஊழல் பெருச்சாளிகள்
ஊரெங்கும்
ஓடித்திரிய –
பருத்த பூணைகள்,
பாலுக்குக்
காவல் காக்கும் வேலைக்கு
விண்ணப்பம் எழுதி –
வரிசையில் நிற்கின்றன !
• * *
நாளைய -
இந்நாட்டு மன்னர்கள்,
வீதிகளில்
பிச்சைப் பாத்திரங்களோடு –
பிராந்திக்கு அலைகிறார்கள்.
• * *
பிதாவே –
மேய்ப்பரே !
நீர் –
மீண்டும் பிறந்து வந்தால் –
எங்கள் எல்லைக்குள்
வந்து விடாதீர்.
காசுக்காக ஓட்டளிக்கும்
எங்கள் மந்தை ஆடுகள் –
உம்மைக்
காட்டிக் கொடுக்காதென்பதற்கு
உத்தரவாதமில்லை.
ஜாக்கிரதை !
• * *