வாழ்வு மறுக்கப்பட்ட விதவை நான்
மத்தளம் முழங்க
நாதஸ்வர ஓசை கோலோச்ச
சொந்த பந்தங்கள்
தூவிய அர்ச்சதையில்
உடலெங்கும் சிலிர்த்திடும் பொழுது
நெஞ்சை தட்டியது
நான் சுமங்கலி என்று பறைசாட்ட
என் கணவன் கட்டிய தாலி
காலங்களும் நேரங்களும்
பின்னிய சதி வலையில்
விதி விளையாடி வென்றதும்
நான் பெற்றேன் வெள்ளை புடவை
பிறந்ததும் என் வீட்டு மாஹலக்ஷ்மி
என்றாள் அம்மா
கணவன் பிரிந்ததும் ஊர் கூடி
பெயரிட்டது சகுனங்கெட்டவள் என்று
துணைவன் இழந்தவளுக்கு
செந்நிற குங்குமமும்
வெண்ணிற மல்லிகையும்
கலகலக்கும் வளையல்களும்
கூடாதாம்
துணையாய் வந்தவன்
விதியோடு போனான்
நடைபிணமாய் என்னை
அலையவிட்டு
படித்து பெற்ற பட்டம்
ஒன்று தான்
இன்றோ என்னுடன்
பட்டங்கள் பல
காலன் வந்து அழைக்கும் வரை
உயிர் வளர்க்க வேண்டுமே
பணிக்கு செல்லும் வேளையில்
அவல் போல் ஆயினேன்
புருஷன் போன பின்னும் கூட
குலிக்கி தளுக்கி போகிறாள்
புருஷன் செத்த கவலை
கொஞ்சம் கூட இல்லையே
இரணப்பட்ட உள்ளத்தில்
உப்பை அள்ளி கொட்டும்
உள்ளங்கள் உணர்வதில்லை
இரத்தம் கசியும் என்
நெஞ்சை பற்றி
இச்சையோடு
என்னை சுற்றும் விழிகளையும்
நரம்பில்லா நாக்குகள் சிந்திடும்
அமில வார்த்தைகளையும்
என் நிலைக்கு வருந்தி
விதியை நொந்து கொள்ளும்
மனங்களையும் விட
சால சிறந்தது
உடன்கட்டை ஏறுவது
தீயில் இட்டும் வேகவில்லை
உணர்ச்சிகள் கொண்ட தேகம்
இருந்தும் மனசூடு தாங்காமல்
ஐயோ அம்மா என்று
அலறினேன்
யாருக்கும் கேட்கவில்லை
நான் இறந்துவிட்டேன்