இறைமறுப்பின் இன்றியமையாமை-1

(From "Necessity of Atheism" by Dr.D.M.Brooks)

ஒரு மனிதன் சரியான கோணத்தில் நின்று உண்மையைக் கண்டுணர்கிறான். அதற்காக பிறரால் ஒதுக்கப்படுகிறான்; தண்டிக்கப்படுகிறான். ஆனால் விரைவில் அவர்கள் அவனுடைய கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேணடியவர்களாகின்றனர். - டிரேப்பர்

அதிக காலத்துக்கு முன்பே பழைய கடவுள்களுக்கு முடிவு வந்துவிட்டது. அது நன்மையானதும், மகிழ்ச்சியானதுமான முடிவாகும்.

அவர்கள் மங்கிய ஒளியில் மெதுவாகச் சாகவில்லை. ஆனாலும் அந்தப் பொய் சொல்லப்பட்டு வருகிறது. அவர்கள் சிரித்துக் கொண்டே செத்துப் போனார்கள்.

ஒரு கடவுளால் கடவுள்தன்மையற்ற சொற்கள் சொல்லப்பட்ட போது தான் அம்முடிவு வந்தது. நான் மட்டுமே கடவுள்; என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.

பொறாமையுடைய ஒரு தாடிக்காரக் கடவுள் தன்னை மறந்து இப்படிச் சொன்னார்.

எல்லா கடவுள்களும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டே பலமாகச் சிரித்தனர், அப்படியானால் கடவுள்கள் இருக்கின்றனர் என்பதை விட கடவுள் இல்லை என்பதே சிறந்த கடவுள் தன்மை அல்லவா?

காதுள்ளவன் இதைக் கேட்கக்கடவன்.
-தஸ் ஸ்பேக் ஸாரதுஷ்ட்ரா நூலில் பிரட்ரிக் நீட்சே

முன்னுரை
மதங்களைப் பற்றி பேசும் போது தெளிவாக, தயக்கமின்றிப் பேசுதல் அவசியமாகிறது. ஏனென்றால் கருத்து சுதந்திரம் கொண்ட மனிதன் மதக்கோட்பாடுகளின் தீமைகளைப் பற்றி தயக்கத்துடன் பேசுவான் என்றால், வைதீக நம்பிக்கையாளன் எண்ணுவான், ஓ! இவன் வருத்தத்துடன் வைதீக ஊன்றுகோலை அகற்றப் பார்க்கிறான். முன்னேறும் மனிதகுலத்தை தடுத்து நிறுத்த அனைத்து மதங்களும் முயல்கின்றன. இக்காலத்தில் உள்ள மனித முன்னேற்றம், மகிழ்ச்சி தொடர்பான எந்தப் பிரச்சினைகளையும் மதத்தால் தீர்க்க முடியாது. தடைகளுடனும், தயக்கத்துடனும் கூடிய கருத்து சுதந்திரமும் அதனைத் தீர்க்க முடியாது.

ஹாவ்லாக் எல்லிஸ் கூறுகிறார், ஒரு மனிதன் தான் வளர்க்கப்படும் போது ஊட்டப் பட்ட தொடக்க நம்பிக்கையை, தனக்குச் சொந்தமல்லாத அந்த நம்பிக்கையை எதிர்த்துப் போராடாவிட்டால் அவன் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும், அறிவுக்கட்டுப்பாட்டையும் மட்டும் இழந்துவிடுகிறான்.

அது அவனது பணிகளை பயனற்றதாக்கி விடும். விமர்சனம், ஆய்வு, திறந்த மனத்தோடு கூடிய அணுகுமுறை, தனிப்பட்ட பிரச்சினைகளை அணுகும் முறை போன்றவற்றில் பயிற்சியை இழக்கிறான். இதனை எதனாலும் ஈடுகட்ட முடியாது. அவன் தனது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை மன ரீதியிலான காட்டில் கழிக்க வேண்டியவனாகிறான். அவனது கரங்கள் அவனைச் சுற்றியிருக்கும் செடிகொடிகளை அகற்ற முடியாதவாறு வலிமை இழந்திருக்கிறது. அவனது கண்கள் ஒளியைக் கண்டுபிடிப்பதற்கான சக்தியை இழந்திருக்கின்றன. ஒரு மனிதன் மதக் கோட்பாடு என்ற காட்டிலிருந்து வெளியே வந்துவிட்டான் என்றால் அவன் சுத்தமான, நலமான சூழலில் வந்து விட்டதை உணர்வான். அறிவு ஒளியைப் பெற்ற இந்த சூழலில் மனிதன் எல்லா மதங்களும் சரித்திர, அறிவியல் தன்மைகளில் தவறானவை என உணர்கிறான். மிகச் சிறந்த இந்தக் கோணமானது மதங்களின் மிகைப்படுத்தப்பட்ட ஒழுக்கக் கோட்பாடுகளை ஒதுக்கித் தள்ளுகிறது. அவனது முடிவு என்னவென்றால் மதங்கள் அழிக்கப்பட வேண்டியவை என்பது ஆகும். ஏனென்றால் அவை தற்காலத் தேவைகளுடன் ஒத்துப் போக இயலாதவை, அவற்றைப் பற்றி அறியாதவை. கருத்துசுதந்திரவாதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்ல, மதக் கோட்பாடுகளைப் பற்றிக் கொண்டே அவற்றைப் புறக்கணிப்பவர்களும் இதனை உணர்த்துகிறார்கள்.

ஸ்பைனோசா கூறுகிறார், புத்திசாலியான மனிதன் எப்படி சாவது என்பதைப் பற்றி யோசிக்க மாட்டான். எப்படி வாழ்வது என்பதைப் பற்றியே யோசிப்பான். மதங்களும் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றிப் போதிக்கின்றன. அவன் இறந்த பிறகு மோட்சத்திற்குப் போவதைப் பற்றி அவை போதிக்கின்றன. ஆனால் அவன் தனது சக மக்களுக்கு உதவுவதைப் பற்றிப் போதிப்பதை விட மத சடங்காச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையே அவை போதிக்கின்றன. மதங்கள் துன்பப்படுபவன் அடுத்த உலகத்துக்குச் செல்லும் பாதையை இலகுவாக்குவதைப் பற்றியே போதிக்கின்றன. இவ்வுலகத்தில் துன்பங்களிலிருந்து விடுபட்டு நன்முறையில் வாழ்வதைப் பற்றிப் போதிக்கவில்லை.

கருத்து சுதந்திரம் கடவுளர்களை அவர்களது அரியணைகளிலிருந்து கீழிறக்கி உள்ளது. அவர்களின் இடத்தில் ஒரு வெற்று விக்கிரகத்தை வைக்காமல் உண்மைப் படைப்பாளியான மனிதனின் கருத்தை வைத்துள்ளது.

மனிதன் கடவுளர்களுக்கு கொடுத்த குணங்கள் அனைத்தும் தான் மதிப்பிற்குரியதாகக் கருதி கடைபிடிக்க விரும்பும் குணங்களே என்பது இப்போது தெளிவாகியுள்ளது. ஒரு கருத்து சுதந்திரவாதியின் எண்ணம் மனிதன் தனது சக மனிதனுக்கு பயன்படும் தன்மையை விரிவுபடுத்துவதிலேயே உள்ளது. ஆனால் ஒரு ஆத்திகனால் உண்டான பல தன்மையதான மதப்பிரிவுகள் இப்பொழுது மனித நாகரிகத்தை அச்சுறுத்துவதாய் உள்ளன. மதமானது கடந்த காலத்தில் கணக்கிட இயலாத துன்பத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தியது என்ற வரலாற்றுக் கூற்றை நடுநிலையுடைய அறிவாளி ஏற்றுக் கொள்வான். இன்று அது கலாசார இடர்ப்பாடு ஆகவும், மனுக்குல நன்மைக்கு அச்சுறுத்தலாகவும், மனித வெறிக்கு இறுதி புகலிடமாகவும் இருக்கிறது என்பதே ஒரு கருத்து சுதந்திரவாதியின் எண்ணமாகும்.

மனிதனின் உடலில் குடல்வாலின் இருப்பைப் போன்றதே கடவுள் தத்துவமும். பல்லாயிரம் வருடங்களுக்கு முன் அது பயனுடையதாய் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அது மனிதனின் நலத்துக்குக் கேடாய் அமைந்துள்ளது. அக்கேட்டை அது ஈடு செய்யவில்லை. நீங்கள் நான் சொல்வதை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் நான் சான்றுகளைச் சுட்டும் வரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டும். ஒரு நீதிபதி ஒரு தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே அவனுக்குத் தண்டனை விதிக்கும் போது அந்த மனிதனுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. அது போலவே ஒரு மனிதனும் இறையேற்பின் வாதங்களையும், இறைமறுப்பின் வாதங்களையும் கேட்காமல் அக் கொள்கைகளில் ஒன்றை ஏற்றுக் கொள்ள் முடியாது. கருத்து சுதந்திரமானது என்றைக்கும் ஒருசார்புடையதாய், ஒருபக்க வாதத்தை மட்டும் ஏற்பதாய் அமைந்தது அல்ல.

இருபதாம் நூற்றாண்டின் மதப்புரட்சியில் யுத்தமானது இறையேற்புக்கும், இறைமறுப்புக்கும் இடையிலாகும். எல்லா இறையேற்பாளர்களும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கலாம். ஆனால் தொலைநோக்குடைய மனிதனே இறுதியில் வெற்றி பெறுவான். கருத்து சுதந்திரவாதி இகழ்வாக, தாழ்ந்த ஜந்துவாகப் பார்க்கப்பட்ட காலம் சென்றுவிட்டது. பிரசங்க பீடத்தில் இருப்பவர் அந்த வார்த்தைகளால் மக்களை ஏமாற்ற முடியாது. கருத்து சுதந்திரவாதி இன்று ஒரு பெரிய திட்டத்துடன் இருக்கிறார். அத்திட்டம் பூவுலகு சம்பந்தப் பட்டதாகும். அதை ஒரு தரிசனம் என்று சொல்லலாம். ஏனென்றால் அது இப்பொழுது தற்கால எல்லையைத் தாண்டிப் போயிருக்கிறது. ஒரு மதங்களற்ற சமுதாயத்தை முன்னிறுத்துகிறது. இந்த தரிசனம் அறிவின் ஆயுதங்களின் தயாரிப்பாகும். அது நிச்சயமாக கையாலாகாத ஆயுதங்களை வைத்துக் கொண்டு பத்திரமாகப் பதுங்கியிருக்கும் இறையேற்பாளர்களை வென்று விடும். இறையேற்பாளரின் ஆயுதங்களான கடவுள், பைபிள், பரலோகம், நரகம், ஆன்மா, அழியாமை, பாவம், மனிதனின் வீழ்ச்சியும் இரட்சிப்பும், ஜெபம், கொள்கை, கோட்பாடு போன்ற அவர்களது கையாலாகாத ஆயுதங்கள் ஒரு அறிவாளியிடம் மாபெரும் போர்க்கப்பல் மேல் சிறு அம்பு பாய்ந்தது போன்ற விளைவையே ஏற்படுத்துகிறது. இறையேற்பாளர்கள் பவுதீக ரீதியிலான போரிலும், பலவந்தப்படுத்தி மற்றவர்களின் மனத்தைக் கட்டுப்படுத்துவதிலும் தங்கள் முழுச் சக்தியையும் பிரயோகிக்கிறார்கள். ஆனால், கருத்து சுதந்திரவாதியோ இவற்றை வெறுக்கிறான்.
இறையேற்பும், இறைமறுப்புமே இப்பொழுது வாதக்களமாக விளங்குகின்றன. ஒரு இறையேற்பாளன் அடிப்படைவாத வகுப்பினனாயிருந்தாலும், இல்லையென்றால் நவீனத்துவ வாதியாக இருந்தாலும் மனித சக்திக்கு அப்பாற்பட்டதிலும், வெளிப்பாடுகளிலும், வேதத்தின் பிழையற்ற தன்மையிலும் (ஒருவேளை சிலவற்றைத் தவிர்க்கலாம்), மனித நடவடிக்கைகளில் தெய்வத்தின் தலையீட்டிலும் ஐநூறு வருடங்களுக்கு முந்தைய தனது முன்னோர் நம்பிக்கை கொண்டிருந்தது போலவே நம்பிக்கை கொண்டு அவற்றை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறான்.

இவற்றை அனைத்து இறையேற்பாளர்களும் ஒத்துக் கொணடிருக்கிறார்கள். இவற்றைக் கொண்டே விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இறைமறுப்பாளர்கள், இறையேற்பாளர்களின் இக்கொள்கைக்கு நேர் எதிராக நிற்கிறார்கள். மனிதன் இத்தகைய சிந்தனையோட்டத்தை எப்படி அழைக்கிறான என்பதைப் பற்றிக் கவலையில்லை. கடவுள் நம்பிக்கையற்றவன், சந்தேகவாதி, பகுத்தறிவுவாதி, ஆஜ்நேயவாதி, இறைமறுப்பாளன் என்று எந்தப் பெயரினாலும் அத்தகைய சிந்தனையோட்டம் உடையவன் அழைக்கப்படலாம். அவன் எல்லா மதங்களும் அதல பாதாளத்திற்குச் செல்கின்றன என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறான். அந்த மூட நம்பிக்கைகள் எவ்வளவு விரைவில் அழிந்து போகின்றன என்பது கால அளவைப் பொறுத்தது ஆகும். அந்தக் கால அளவானது மனிதனிடம் அறிவியல் எத்தகைய வேகத்தில் பரப்பப்படுகிறதோ, எத்தனை விரைவில் அவன் அதைப் புரிந்து கொள்கிறானோ அந்த விரைவைப் பொறுத்தது ஆகும். மனிதன் எப்பொழுது அறிவை மனித ஆய்வினாலும், மனப்பயிற்சியினாலும் தான் அடைய முடியும் என்பதைப் புரிந்து கொள்கிறானோ அப்பொழுது தான் மதமில்லாத் தன்மையானது மதவாதிகளை வெற்றி கொள்ள முடியும். இந்த மதமற்ற தன்மையே மனிதப் பிரச்சினைக்கான தீர்வுகளுக்கு தெய்வீக வெளிப்பாடு என்று கூறப்படுபவற்றின் இடத்தில் அவற்றுக்குப் பதிலாக மனித ஆய்வு முடிவுகளை வைப்பதை விரைவுபடுத்த முடியும். மனிதனின் இத்தன்மையே அவன் தன்னைத் தானே சார்ந்திருக்கச் செய்யும். கடவுள் தத்துவத்தால் உண்டான தாழ்வு மனப்பான்மையை அகற்றும். தனது விதியைத் தானே நிர்ணயித்துக் கொள்பவனும், நல்வாழ்வை நாடுபவனும், உண்மையை நாடுபவனும், இருப்பதில் நம்பிக்கை கொள்பவனும் என்ற அளவில் கடவுளின் இடையீடில்லாமல் மனிதனை மனிதன் சார்ந்திருக்கும் நிலை என்பதே இறைமறுப்பின் பரந்த தரிசனமாகும்.

மதமற்ற தன்மையின் முக்கிய பகுதிகளான அறிவியலும், பகுத்தறிவும் இறையேற்புக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பாக விளங்குபவை. தற்காலத்தில் அதிகமான நபர்களின் மனப்போக்கிற்கு இறைமறுப்பும், மதமற்ற தன்மைiயும் பொருந்தவில்லை. ஏனென்றால் அவை அறிவின் அமைதியான ஒளியோடு அணுகப்பட வேண்டியவை. அறிவு மனிதனின் பகுத்தறியும் தன்மையைத் தூணடும். இத்தகைய அறிவின் விதைகள் வளமான மனித மனதிற்குள் விழுந்தால் அவை செழித்து வளரும். கொள்கை,
கோட்பாடு என்று மதத்திற்குள் தங்களை அழுத்திக் கொண்டிருப்பவர்களின் தரிசு நில மனதுக்குள் இந்த அறிவின் விதைகள் விழுந்தாலும் வேர்விடாது. காரியங்களை உள்ளது உள்ளபடி ஒத்துக் கொள்வதும், அவற்றை ஆய்வதும் மனித மனத்திற்கு இயற்கையாக உண்டாகக் கூடிய செயற்பாடு அல்ல. மத விஷயங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் முதிர்ச்சி அடையவில்லை. அவர்கள் இன்னுங் குழந்தையாகவே இருக்கிறார்கள். தங்களின் சின்னச் சின்ன ஆசைகளை கால வெள்ளம் அடித்துச் சென்று விடும் என்பதை உணராமலே இருக்கிறார்கள். நிலையற்ற உணர்ச்சிகளுக்கு இடங்கொடுப்பது அவர்களுக்கு அப்போது எளிதான வழியாகப் படுகிறது. இவை கட்டற்ற கற்பனைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் இடங்கொடுத்து இறையேற்பின் அடிப்படையை அமைக்கின்றன.

இறையேற்பானது முட்டாள்தனமான ஆர்வத்தையும், மிருகத்தனமான வெறியையும் தோற்றுவிக்கிறது. இதிலிருந்தே கசப்பான வெறுப்பும் அறியாமையும் தோன்றுகின்றன. மதமற்ற மனிதனின் அறிவு வேகமாக இருக்கிறது. உணர்ச்சிகள் கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் ஒரு மதவாதிக்கு அறிவு அடங்கி இருக்கிறது. உணர்ச்சி தலைவிரித்து ஆடுகிறது. எல்லா மனிதனிலும் உள்ள ஒரு கொடூரத் தன்மை அறியாமையினாலும், பயத்தினாலும் ஒரு கடவுளைத் தோற்றுவிக்கிறது. அறிவியலும், பகுத்தறிவுமே இத்தகைய மாயப் பிசாசுகளிடமிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும். ஆனால் நமது பொருளியல் முன்னேற்றத்தின் அளவை விடவும், சமூக முன்னேற்றத்தின் அளவை விடவும் அறிவு முன்னேற்றம் தாழ்ந்து நிற்கிறது. இருபதாம் நூற்றாண்டு மனிதன் இந்த நூற்றாண்டின் பொருளியல் இன்பங்களைத் துய்க்கிறான். ஆனால் அவனது அறிவோ இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த கோணத்திலிருந்து இன்னும் மாறவேயில்லை.

சர் லெஸ்லி ஸ்டீபன் அறிவித்தார், எத்தனையோ நல் மனிதர்களின் அறிவும், வேகமும் அழுகிக் கொண்டிருக்கும் கோட்பாடுகளினாலும், செத்துப் போன கொள்கைகளை உயிர்ப்பிக்க முயற்சித்ததிலும் வீணாயின. முன்னேற்றத்தின் தலைவராக இருக்க வேண்டியவர்கள் முன்னும் பின்னுமாக பார்த்துத் தடுமாறி கடந்த காலத்தை மனதில் வைத்துப் போற்றிக் கொண்டு இருக்கும் வரையிலும் சமூகம் முன்னேறாது.

எத்தனையோ குரூரங்களும், துன்பங்களும் உலகினைப்
பலருக்கு சித்திரவதைத் தலமாக்கியிருக்கும் மதத்தை மனிதன் பரிகாரத்திற்காக உபயோகப்படுத்தலாம் என்று நினைக்கிறான். அவன் தன்னை சுற்றியிருக்கும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதை பற்றி எண்ணுவதில்லை. அதற்குப் பதிலாக அவன் கற்பனையான கருத்துகளைச் சிந்திப்பதிலேயே நேரத்தைச் செலவிடுகிறான். பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற எல்லா மதங்களும் சோம்பல் தன்மையுடன் கூடிய நம்பிக்கை வாதத்தின் மூலம் நம் சக மனிதர்கள் மீதான அன்பை வற்றிப் போகப் பண்ணுகின்றன. அடுத்த உலகத்தைப் பற்றிய போதனைகள் இவ்வுலகத் தீமைகளை மறக்கடிக்கப் பண்ணும் போதைப் பொருள்களாக விளங்குகின்றன. பெரும்பாலான நமது மத போதகர்களின் இறுதி வார்த்தை, உழைக்காதே, கனவு காண் என்பதாகவே இருக்கிறது.

கடவுளுக்கு சிறந்த விஷயங்களைப் பற்றியும், தனி மனிதன் அல்லது சமுதாயத்துக்குப் பொருத்தமான விஷயங்களைப் பற்றியும் சர்ச்சை அடிக்கடி எழுகின்றது. ஒரு நபரால் சமுதாயத்துக்கும், பாரம்பரியக் கடவுளுக்கும் ஒரே நேரத்தில் சேவை செய்ய முடியாது. எனவே கருத்து சுதந்திரவாதிகளின் எண்ணம் என்னவென்றால் மனிதன் பழங்காலங்களில் கடவுளுக்கு செய்திருந்த சேவையை தனது சக மனிதனுக்குச் செய்திருந்தான் என்றால் மனித நாகரிகம் வெகுவாக முன்னேறியிருக்கும் என்பதே.

இந்த நூலில் கூறப்படும் செய்திகள் தெய்வீக எதிர்ப்புத்தன்மை வாய்ந்ததாய் வாசகருக்குத் தோன்றுமாயின் நான் கூறுவேன், இவை உண்மையான தகவல்கள். இது நூலாசிரியரது குரல் மட்டுமல்ல. அவருக்கு முன் வாழ்ந்த பல நேர்மையான ஆய்வாளர்களின் கருத்துமாகும். பேராசிரியர் ஜேம்ஸ் ஹெச். லூபா கூறுகிறார், எனவே, ஒழுக்க உயர்வுக்கும், அறிவு முன்னேற்றத்துக்கும் அனைத்து கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் சம வாய்ப்புகளும், சுதந்திரங்களும் அளிக்கப்பட வேண்டும். மாறான கோட்பாடுகள் பகிரங்கமாக நிரூபிக்கப்படுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த வழியிலே அறிவியல் உண்மைகள் சோதிக்கப்படுகின்றன. அதைப் போன்றே மதமும், தர்மங்களும் சோதனை செய்யப்பட வேண்டும். ஆனால் மக்கள் அறிவைத் தேடுவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கும் போதோ, அறிவு மறைக்கப்பட்டிருக்கும் போதோ தெளிவான வாதப்போர் நிகழ முடியாது.

அறிவை வளர்ப்பதே மனிதனின் கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும். செத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருப்பவர்களும் இதனை ஒத்துக் கொண்டேயாக வேண்டும். வின்வுட் ரீட் கூறுகிறார், அறிவை வளர்ப்பது ஒரு மதக்கடமையாகும். இந்த உண்மை மனிதனால் புரிந்து கொள்ளப்படும் போது, மனிதனின் அறிவு பெரிதல்லவென்றும், கண்மூடித்தனமான விசுவாசமே பெரிதென்றும் கூறும் மதங்கள் தோற்றுப் போகும்.
கருத்து சுதந்திரத்தின் கோட்பாடுகள் கடவுள் தத்துவத்தைச் சூழ்ந்துள்ள மேகத்தை சிதறடிக்கின்றன. பரலோகக் கனவுகளை மனிதனின் கண்களிலிருந்து மாற்றிப் போடுகின்றன. இத்தகைய சூழ்நிலையிலேயே சிசெரோவின் இவ்வாக்கியம் உண்மையாக முடியும்,

மனிதன் மனிதனின் நலத்துக்காகவே பிறந்திருக்கிறான். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும்.

எழுதியவர் : (28-Oct-12, 6:59 pm)
பார்வை : 258

மேலே