அம்மா !!!
உறங்க மறுக்கும் விழிகளுக்கு என்ன தெரியும்
என் உணர்வுகள் என்னவென்று...
உறவுகளுக்காக என் உயிருக்கு உரம் போடுகிறேன்
ஆனால் விளைச்சல் தான் மந்தம்...
கடன் பெற்ற விவசாயிதான் நான்
யாரிடம் பெற்றேன்?
அக்கம் பக்கத்திலா? சொந்தத்திலா?
இல்லை! இல்லவே இல்லை!
என் தாயிடம்!
அடேய் முட்டாள் ! என்கிறது என் பேனா மை
அதற்க்கும் தெரிகிறது தாயின் பாசம்
கடன் அல்ல காவியம் என்று !
என் காவிய நாயகி கண்களில்
இறைவன் கங்கையை படைத்தானோ !
என் கண்கள் அவளை பார்த்த நாள் முதல்
கண்ணீர் கசிந்தவாரே உள்ளதே...
அணை கட்ட அன்று வயதில்லை,
அவள் புடவையில் தூளி ஆடியபோது தெரியவில்லை
அவள் பாடியது சோக ராகம் என்று !
அவள் முந்தியை பிடித்து நடக்கும்பொழுது தெரியவில்லை
அதில் இத்தனை கவலைகளை முடிந்து வைத்தாள் என்று !
அவள் விரல் பிடித்து உலா வந்தபொழுதும் தெரியவில்லை
இவள் இவ்வளவு விந்தையான மனுஷி என்று !
இன்று வளர்ந்து விட்டேன் நான்
உன் விழிகள் சிந்திய கண்ணீரை
அன்று முதல் சேகரித்தேன் அம்மா என் இதயத்தில்...
இன்று நீ கண்ட கனவு காட்சியானது
உன் அன்பில் விளைந்த உள்ளத்தில்
இந்த விவசாயி உயிர் வாழ்கிறேன்...
இதோ உன் தோள்கள் லேசாகட்டும்
சுமைகளை நான் சுமக்கும் தருணம் வந்தது...
என் கண்கள் உங்களுக்காக உறங்க மறுக்கட்டும்
என் நினைவு உங்களுக்காக நடமாடட்டும்
இனி உங்களுக்கு தாயுமானவன் நானே...