வளர்மதி இருந்தால் வானம் அழகு

வளர்மதி இருந்தால் வானம் அழகு
வளர்ச்சி இருந்தால் வாழ்க்கை அழகு
முதிர்ச்சி இருந்தால் நினைவுகள் அழகு
முயற்சி இருந்தால் முட்டுக்கட்டை அழகு

கருத்து இருந்தால் கவிதைகள் அழகு
காதல் இருந்தால் கடவுளும் அழகு
பூக்கள் இருந்தால் பாதைகள் அழகு
புன்னகை இருந்தால் மனிதர்கள் அழகு

தாய் மடி இருந்தால் உறக்கம் அழகு
சேய் மொழி இருந்தால் செவிகள் அழகு
இணைதுணை இருந்தால் இல்லறம் அழகு
இறைவழி இருந்தால் நல்லறம் அழகு

துணிவது இருந்தால் சவால்கள் அழகு
பணிவது இருந்தால் பண்பாடு அழகு
கனிவது இருந்தால் வார்த்தைகள் அழகு
கற்பனை இருந்தால் அனைத்துமே அழகு

நாணம் இருந்தால் நளினங்கள் அழகு
பாவம் இருந்தால் பாடல்கள் அழகு
ராகம இருந்தால் ஓசைகள் அழகு
மோஹம் இருந்தால் முத்தங்கள் அழகு

வீரம் இருந்தால் யுத்தங்கள் அழகு
தியாகம் இருந்தால் சித்தங்கள் அழகு
தாகம் இருந்தால் சுனைநீர் அழகு
சோகம் இருந்தால் தத்துவம் அழகு

ஒழுக்கம் இருந்தால் பழக்கம் அழகு
அடக்கம் இருந்தால் இணக்கம் அழகு
விளக்கம் இருந்தால் பிறமொழி அழகு
முழக்கம் இருந்தால் தமிழ் மொழி அழகு.....!

எழுதியவர் : (5-Nov-12, 12:16 am)
பார்வை : 516

மேலே