!!!===(((விடவே விடாது கருப்பு)))===!!!
இலங்கையில் போர் முடிந்து மூன்றரை ஆண்டுகள் முடிவடைந்த இருக்கிறது, அங்கு இலங்கை அரசு தமிழர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் பன்முக தாக்குதல்களை கையாண்டு பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே ...
இந்த இறுதி யுத்தத்தில் போராளிகளும் பொதுமக்களும் கொல்லப்பட்டது குறித்தும், போர் மரபுகள் மீறிய குற்றங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும், இலங்கை அரசின் இனஅழிப்பு வெறிசெயல் குறித்தும், உலக தமிழ்ச் சமூகம், புலம்பெயர் தமிழர் கட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழீழ அரசின் முக்கிய தலைவர்களும் அங்கத்தவர்களும் இலங்கை அரசு புரிந்த குற்றத்திற்கான பல ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்து தொடர்ந்து நீதிகேட்டு போராடி வந்தனர்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை 285 பரிந்துரைகளை இலங்கை அரசிடமளித்து இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கான மறுவாழ்வு பணிகளை உடனே செய்து தரும்படி கூறியது, ஆனால் இலங்கை அரசு அந்த பரிந்துரைகள் எதையும் நிறைவேற்றாத நிலையில் தமிழர்களின் மீது தொடர் வன்கொடுமைகளை நடத்தி மெத்தனம் காட்டி வந்தது.
கடந்த பதினான்கு நாட்களாக தொடர்ந்து நடந்து வந்த ஐ நா அமர்வில் நவம்பர் ஒன்றிலிருந்து இலங்கை மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது, இதில் அமெரிக்க பிரிட்டன் பிரான்ஸ் பெனின் மற்றும் 99 உறுப்பு நாடுகளும் இலங்கை அரசுக்கு கடுமையான அழுத்தத்தை பிரயோகித்தது, இந்த அழுத்தம் தமிழ் இனத்திற்கு ஒரு நம்பிக்கையை விதைத்து இருக்கிறது.
இந்த மனித உரிமை அமர்வில் ஐக்கிய நாடுகள் சபை 210 பரிந்துரைகளை இலங்கை அரசுக்கு வழங்கியது ஆனால் இலங்கை அரசு அதில் 110 பரிந்துரைகளை மட்டுமே ஏற்றுகொண்டு உள்ளது மீதமுள்ள 100 பரிந்துரைகளை அது ஏற்க மறுத்துள்ளது, இப்படி இருக்கும் நிலையில் அமெரிக்க இலங்கைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
நல்லிணக்க ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறைவேற்ற தவறிவிட்ட சூழ்நிலையில் தமிழர்களுக்கான வாழ்வுரிமையை இலங்கை அரசிடமிருந்து மீட்பது என்பது மிக சாதாரணமான விடயமல்ல என்பது தெளிவாக புலனாகிவிட்டது, ஆகையால் உலகம் தழுவிய தொடர் அழுத்தம் தொடர்ந்து தொடரவேண்டும், நம் மக்களுக்கான நீதி கிடைக்கும்வரை இந்த அழுத்தம் தொடர வேண்டியது மிக அவசியமானதாகும், அதோடு இல்லாமல் நீதி மற்றும் உரிமைக்காக தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியமும் இருக்கிறது.
இந்த அமர்வில் இலங்கை அரசு தனது போலியான நியாயங்களையும் போலியான வாக்குறுதிகளையும் வழமைபோல் கதைத்துள்ளது, ஆனாலும் இலங்கை அரசின் போலிமுகம் பல நாடுகளுக்கு வெளிச்சமாகி உள்ளது என்பது நேரடி மற்றும் மறைமுக உண்மையாகும்.
இந்த அமர்வில் பன்முக விமர்சனத்திற்கு இலங்கை அரசு உள்ளானதும், பல நாடுகளின் நேரடி அழுத்தம் இலங்கை மீது மேற்கொள்ளப்பட்டதும் தமிழ் இனத்திற்கு ஒரு சிறு நம்பிக்கையை விதைத்துள்ளது. அதே வேளையில் இந்தியா உள்பட பல ராஜதந்திர நாடுகள் சரவதேச நீதி மன்றத்தின் ஆணையை மதிக்காத இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் கூறுகளையும் உணர முடிகிறது.
முன்பொரு காலத்தில் ஐ நா அவையில் எங்களை அனுமதிக்காமலேயே வெளியே தள்ளி கதவடைத்தார்கள் ஆனால் இன்று எங்களை அழைத்து பேசுகிறார்கள், எங்கள் குரலுக்கு செவி சாய்க்கிறார்கள், உலக நாடுகளும் எங்கள் நிலை புரிந்து பேசுகிறார்கள் இதையே படிக்கட்டுகளாக்கி எங்கள் உரிமையின் இலக்கை நோக்கி நாங்கள் நகர்வோம் என்று புலம்பெயர் தமிழீழ அரசின் அங்கத்தவர் பொன் பாலராஜன் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
ஐ நாவின் அமர்வில் பல சம்பவங்கள் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இருந்தாலும், இந்தியாவின் மௌனம் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கை மட்டும் கானல் நீராகவே உள்ளது.
மேலும் இன்று லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் சர்வதேச சுயஉரிமை மாநாடு நடக்க உள்ளது, இதில் இலங்கை பிரச்சனை குறித்தும் அங்கே நடந்த போர் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் குறித்தும், 1 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் ஈழப்போரில் காணாமல் போனது குறித்தும், ஜெனிவா மனித உரிமை ஆய்வக அங்கத்தவர் நவநீதம் பிள்ளை அவர்களோடு உலக தமிழின தலைவர்களும், உலக தமிழ் சமூக அமைப்புகளும், நாடுகடந்த தமிழீழ அரசும், புலம்பெயர்ந்த தமிழ் சமூகங்களும் ஒன்றிணைந்து கலந்தாலோசிக்க உள்ளார்கள், இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது, தமிழகத்தில் இருந்தும் பல முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக தமிழர்களின் பல நேரடி போராட்டத்தின் மூலமாகவும், ஓயாத பலகட்ட அழுத்தத்தின் காரணமாகவும், ஊடகங்கள் செய்தித்தாள்கள் போன்றவற்றில் இலங்கை அரசு புரிந்த போர்குற்றத்தின் ஆதாரங்களும் நியாயமான ஆதங்கங்களும் உலக நாடுகளை நம் பக்கம் திசை திரும்பி இருக்கிறது, இப்படி ஒரு சூழலில் நாம் தொடர்ந்து நம் மக்களுக்கான வாழ்வுரிமையும் நீதியும் கிடைக்கும்வரை அழுத்தத்திற்கு மேல் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டியது மிக அவசியமாக உள்ளது.
இனப்படுகொலை செய்தவர்களோடு இனியும் இணைந்து வாழ்வது இயலாத காரியம் ஆகையால் பொது வாக்கெடுப்பையும் கோரி ஐ நாவை தொடர்ந்து வலியுறுத்த வேண்டிய அவசியமும் நமக்குள்ளது, இனிவரும் காலங்களில் ஐ நாவும் உலக நாடுகளும் தங்களது கூர்மையான பார்வையை இலங்கை அரசுமீது செலுத்தும் என்று நம்பப்படுகிறது, இலங்கை அரசு எந்த பரிந்துரைகளையும் முழுமையாக நிறைவேற்ற போவதில்லை, ஆகையால் இலங்கை அரசுக்கு தலைவலி தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது, ஐ நாவின் அடுத்த கட்ட அமர்வில் இலங்கை அரசின் நிலைபாடு தெளிவாக வெளிச்சத்திற்கு வரும் என்றும் தெரிகிறது, எது எப்படி இருந்தாலும் நம் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை எமது போராட்டங்களும் அழுத்தங்களும் ஓயாது, எத்தனை காலங்கள் கடந்தாலும் விடவே விடாது கருப்பு.
(இதை பதிவிட பேருதவியாய் இருந்த கனடா தோழமைகளுக்கும், ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களுக்கும் மிக்க நன்றிகள்.)