மையில் கல்

நட்டு விட்டான் என்னை,
நாதியில்லை கேட்க..
அவன் எட்டுத் திக்கும் போக,
நான் வீதியில் இன்று கிடக்க..

பட்டப் பகலில் நிற்பேன்,
வட்டச் சூரியன் சுட்டெரிக்க..
நட்ட நடு இரவில் நிற்பேன்,
நட்ட இடத்தினின்று மாறாமலென்றும்..

சிற்றுண்டி இல்லை சீராட்டுமில்லை,
சிறுநீர்க் குளியல் மட்டும் தினந்தோறும்..
துணைப் பெண்டிர் இல்லை தூக்கமுமில்லை,
தனித்த நிலைமை மட்டும் நாள்தோறும்..

சிலையாய் நான் நிற்கும் நேரம்,
என் தலையெழுத்து சரியில்லை..
என்னில் எழுதிய எண் எதுவாயினும்,
எண் ஜோசியம் என்னுடன் ஒத்துப்போவதில்லை..

பாவமென்ன செய்தேன்,
பிறவி இப்படி ஆனதே..
நியாயம் இங்கே கேட்க,
நடுவர் எவருமில்லையே.

மையிட்கல் நண்பரெவரும் இல்லை,
நான் மையல் கொண்ட இடத்திலே..
ஒன்பது மையில் தூரம் போனால்,
ஒருவனை மட்டும் காணலாம்..

வேறூன்றி புதைந்து விட்டேன்,
வழியில்லை நகரவே..
உயிரோடு புதைக்கப் பட்டேன்,
உண்மையாக சிதைக்கப் பட்டேன்..

மறுபிறவி என்றொன்று இருந்தால்,
மறவாமல் என்னை வடித்துவிடு என் இறைவா,
வஞ்சம் நிறைந்த மையில் கல்லாக அல்ல,
லஞ்சத்துக்குக் கொடுத்து வாங்கும் வைரக்கல்லாக..

எழுதியவர் : பிரதீப் (12-Nov-12, 4:17 pm)
பார்வை : 182

மேலே