கேளடி என் கண்மணி!

என் கதைகளோடு தொடங்கி
உன் முடிவில்லா கேள்விகளோடு
முடிகிறது ஒவ்வொரு இரவும்!

நிலாவைக் காட்டி அங்கு ஒரு
பாட்டி வடை சுடுகிறாள் என்று தொடங்குகிறேன்
அன்றைய கதையை.

நிலாவில் வடை சுடும் பாட்டிக்கு
யாருமே இல்லையா என்கிறாய்

நிலாவில் யாரும் இல்லை என்றால்
பாட்டி யாருக்காக வடை சுடுகிறாள் என்கிறாய்

உனை சமாளிப்பதற்காய் நான்
யோசித்துக் கொண்டிருந்த இடைவெளியில்-
யாருமில்லா நிலாவில் பாட்டி மட்டும்
எப்படிப் போனாள் என்கிறாய்

பாட்டியிடம் தான் கேட்க வேண்டும்
என்று நான் முணுமுணுக்கையில்
அதையும் கேட்டுக் கோண்டு
அப்போ பாட்டியிடம் கேட்டு
நாமும் நிலாவுக்கு போகலாமா என்கிறாய்

உன் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு
அபத்தமான பதில்களைத் தவிர
சொல்வதற்கு ஒன்றுமில்லை எனக்கு

எனினும் உன் எல்லாக் கேள்விகளுக்கும்
என்னிடம் விடையிருப்பதாய்
நம்பிக் கொண்டிருக்கும் உனக்காகவே
இன்னும் இன்னும் கதைகள்
சொல்வேன், விடையில்லா உன் கேள்விகள் பல

கேளடி என் கண்மணி!

எழுதியவர் : மகாஷ்ரி (20-Nov-12, 3:43 pm)
பார்வை : 176

மேலே