விடையற்ற இந்தக் கவிதையால்...
யாருக்கும் தெரியவில்லை...
எந்தச் சாதியிலும்
பிறக்காத கடவுளின் மேல்....
சாதி...
எப்படி ஒரு
சதி மிகுந்த அடையாளம் ஆயிற்று...?
என.
சிறு குழந்தைகளின் சீண்டல்களை..
இரசிக்கும் அம்மாவின் இயல்பாய்...
கடவுளும் இரசித்திருக்கக் கூடும்...
அவரின் குழந்தைகள்...
அவர் மேல்
ஒரு...ஒப்பனையாய்...
வரைந்து இரசித்த சாதியின் ஒப்பனைகளை.
சீண்டல்கள்...
நெறி தவறிய காலங்களில்..
எப்படியோ...
கடவுளும் அறியாமல்...
அவரின் உடலுக்குள் நுழைந்த
இரத்தமாகிவிட்டது...
மனிதர்களின் சாதி.
சிறு பலிகளால்...
மனிதர்களின் வரமாகிக் கொண்டிருந்த
கடவுள்...
சாதியின் வெறி மிகுந்த விளையாட்டில்..
மனிதர்களின் பலி கண்டு வெதும்பிய போது...
கடவுளின்...
இரண்டு கைகளும் வெட்டப் பட்டிருந்தது.
கண்கள் பிடுங்கி எறியப் பட்டு..
யாரும் காணாத இடத்தில்...
உட்கார வைக்கப்பட்டிருந்தார்...
ஒரு தீண்டத் தகாதவராய்.
சாதியின் அடையாளமாகிவிட்ட
வெறி மனிதர்கள்..
இப்போது கடவுளாகிக் கொண்டிருக்க..
சாத்தானின் விரல்களால்...
அவர்கள்
நெரித்துக் கொண்டிருந்தனர்
சாதியை மீறிக் கொண்டிருந்த
சாதாரண மனிதர்களின் ...கழுத்தை.
கண்கள் அற்று...
நல்ல மனிதர்களுமற்று..
இன்னமும்...
வாழ்ந்து கொண்டிருக்கலாம்
என நம்பப் படும் கடவுளோ...
யார் எறியக் கூடும்...
சாதியின் மேல் ..."தீ"...
என்னும் கேள்வியோடு...
வெறித்திருக்க...
விடையற்ற இந்தக் கவிதையால்
என்ன பலன் இருக்கக் கூடும்?