நழுவிச் சென்றவள்
சந்தன மலரிதழ் சிந்திய தேன்தனில்
..செண்பகம் குளித்து வந்தாள்
சாமரம் வீசிய பூமரம் பேசிய
..சங்கதி விழியில் சொன்னாள்
குங்குமம் நுதழ்தனில் சங்கமம் ஆகிட
..குறுநகை பூத்து நின்றாள்
கொடியினை எடுத்தொரு இடையென கொண்டவள்
..குளிர்தரும் நிலவை வென்றாள்.
திங்களும் தென்றலும் திருடிய மனதினை
..தேவதை திருடிச் சென்றாள்
தீண்டலில் உயிர்வரை சீண்டிடும் காற்றென
..தேகியை வருடிச் சென்றாள்
மன்மதன் வில்லினை புருவமாய் கொண்டவள்
..மலர்விழிக் கணையை எய்தாள்
மலரணை மீதினிற் புதுக்கவி புனைந்திட
..மடலென விரிந்து நின்றாள்
இருபதை தாண்டிய இளமையின் தவமதை
..இளையவள் களைத்து விட்டாள்
அறுபதை தாண்டினும் அடங்கிட மறுத்திடும்
..ஆசையை விதைத்து விட்டாள்
திருமணம் எனுமொரு மருத்துவம் மாத்திரம்
..தீர்த்திடும் வருத்தம் தந்தாள்
நறுமணம் கமழ்ந்திடும் நாள்வரும் போதினில்
..நரியென நழுவிச் சென்றாள்