கழுகு கத்தினால் காசு வரும்.
”கழுகு கத்தினால் காசு வரும்”
பழுது இலா என் காதில் விழுந்தது.
கழுகு கத்தியது, குயிலும் கூவியது
அழகு முகத்திலே வழியும் எண்ணெயை
கழுவிப் போக்கிட காலாற நடந்தேன்
என் கண்கள் மட்டும் இன்னும்
கனவு மயக்கத்தில் மின்னும்.
அலை அலையாய் எண்ணங்களை
அடுத்தடுத்துப் பார்த்து விட்டு
“எலி” யேதும் இல்லாமல் நான்
அடுத்த படம் சொடுக்கி விட்டு
சிலை போலே நின்றிருக்கும்
சிவந்த மேனி தங்கையினை
சிறு பார்வை பார்த்திட்டேன்
சின்னாதாய் ஒரு மாற்றம்.
என்ன ஒரு குதூகலம்
ஏன் இந்த மகிழ்ச்சி
என்ன விசேஷம் எனக் கேட்டேன்
சொதப்பி விட்டுப் போனாள்.
சின்ன ஒரு கல் வீசி
எனை கொந்தளிக்கச் செய்தாள்.
”உன்னைப் பார்க்க வந்தவர்க்கு
என்னைப் பிடிச்சிருக்காம்.”
சொன்ன சொல் கேட்ட நான்
சிலையாய் சமைந்து நின்றேன்.
கழுகு கத்தினால் காசு வரும்
கேட்ட எனக்கு மோசம் வந்தது
ஆயினும் என்ன அவளெனது
ஆருயிர்த் தங்கை தானே
அவள் மணமுடித்துச் சென்றாள்
என் மனமொடித்துச் சென்றாள்.
கழுகு கத்தினால் நான் இப்போது
காதை மூடிக் கொள்கிறேன்.