கேட்காத தாளங்கள்..! பொள்ளாச்சி அபி

ஒரு திருமண விழாவிற்காக,அந்த மண்டபத்திற்குள் நுழைந்தபோது..,ஏதோவொரு இசைக்குழுவினரின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.மண்டபத்தில் நிறைந்திருந்த கூட்டத்தினுள் நண்பர்களுடன் பேசுவதற்கு சவுகரியமாக இடம் பார்த்து அமர்ந்தோம்.

வழக்கமான திரைப்படப் பாடல்கள் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் அவ்வளவாக கவனம் அதில் பதியவில்லை.மேலும்,இங்கு வசிக்கும் எங்களைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே கடல் கடந்து வந்திருந்த அந்த நண்பருடன் உரையாடுவதில் மிகக் கவனம் கொண்டிருந்தோம்.

அவர் வசிக்கும் நாட்டில் நிகழ்ந்த சமீபத்திய அரசியல் நிகழ்வுகள்,தற்போதைய மாற்றங்கள் குறித்து சுவாரஸ்யமாய் உரையாடிக் கொண்டிருந்ததில்,நிமிடங்கள் நகர்ந்ததே தெரியவில்லை.

திடீரென,இசைக்குழு பாடிக் கொண்டிருந்த மேடையிலிருந்து அறிவிப்பாளரின் குரல் கேட்டது.அந்த இசைக்குழுவைச் சேர்ந்த சில இளைஞர்களின் பாடல்களற்ற தனி இசை ஒலிக்கப் போவதாக..,

பேங்கோஸ், மிருதங்கம், தபேலா,முரசு என இன்னும் பலவடிவங்களில் இருந்த தோல் வாத்தியங்களுடன், வாகான இடம் பார்த்து அவற்றை வைத்து தங்களை தயார் படுத்திக் கொண்டிருப்பதும் தெரிந்தது.அவர்கள் எலலோருமே அதிகபட்சம் இருபத்திரெண்டு வயதுள்ளவர்களாகவே தெரிந்தார்கள்.

‘என்ன பெரிதாய் தனியாக அவர்கள் இசைத்துவிடப்போகிறார்கள்.?’ இவ்வளவு நேரமும்,பாடிய திரைப்பாடல்களின் வாத்தியஇசை மட்டும் வரப்போகிறது அவ்வளவுதானே..? என்ற எண்ணத்தில் எங்களின் பேச்சுக்களை மீண்டும் தொடர்ந்தோம்.

சில நிமிடங்களில்..,மெல்லிய சிறு தட்டுக்களாய் துவங்கியது அவர்களின் இசைக் கச்சேரி.ஒரே சீரான தாள கதியுடனும்,இசைக்கருவிகளிலிருந்து வந்த வித்தியாசமான சப்தங்களுடனும்..,அனைத்து இளைஞர்களும் சேர்ந்து இசைத்த அந்த இசைப்பிலிருந்த ஒருவிதமான ஒழுங்கு எங்கள் கவனத்தை மெதுவாய் மேடையின் பக்கம் திருப்பியது.

சிறுஒடையைப் போல சலசலத்தபடி கிளம்பிய நீர்,பின் தனது பாய்ச்சலின் வேகத்தைக் கூட்டிக் கொண்டது போல,இப்போது இசையில் சற்றே வேகம் கூடியிருந்தது. அந்த இசைக்கலைஞர்கள் அனைவருமே,வாசிப்பின்போது மொழியே தேவைப்படாத வகையில்,தலையை மட்டும் விதவிதமாய் ஆட்டிக் கொள்ளும் சைகையால், தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர்.அதனையடுத்து தாளத்திலும்,அது ஒலிக்கும் முறையிலும் மிகத்துல்லியமாய் வித்தியாசங்களைக் காட்டத்துவங்கினர்.
இது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.பேசிக் கொண்டாலே,பலருக்கு நாம் என்ன சொல்ல வருகிறோம் என்று புரியவைக்க முடியாத நிலையில்,இவர்கள் மட்டும் எப்படி வெறும் சைகையில் மற்றவர்களுக்கு தாள மாற்றத்தை உணர்த்த முடிகிறது.?
அதுவும்,அந்தக் குழுவிலிருக்கும்,ஒருவர் மட்டும் தான மாற்றத்திற்கான சைகை செய்தவுடன் உடனடியாக மற்றவர்களும் மாற்றிக் கொள்வதில்லை.ஒருவர் பின் ஒருவராய் நிதானமாய் மற்றவருக்கு தங்கள் சைகைகளை உணர்த்தியபின், அனைவரும் அந்த சமிக்ஞையைப் பெற்றபின்னரே தாளம் மாற்றப்படுகிறது. இதiனிடையே,அதுவரை வாசித்துவருவதிலும் குழப்பமில்லை.அவர்களின் இந்தப் பரிமாற்றம், ஒழுங்கு.., எனக்கு சுவாரஸ்யமான வேடிக்கையாகவும் இருந்தது.

என்னுடன் அமர்ந்திருந்த நண்பர்களும் அதே உணர்வில் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. யாரும் எங்களுக்குள் பேசிக் கொள்ளவில்லை. எல்லோரின் கவனமும்,அவர்களின் வாசிப்பைக் கவனிப்பதிலேயே இருந்தது.

இப்போது இசையின் தாள கதி, விரைவாய் இருந்தது.இதுவரை இசைக்கப்பட்ட ஒலியெதுவும் கேட்பவர்களின் உடலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடவில்லை. ஆனால் இப்போது வாசிக்கப்படுவது எல்லோரையும் அவர்களின் இசைக்கேற்ப தங்களை அறியாமலே,கால்களால் தாளம்போட வைத்திருந்தது.அதை மற்றவர்கள் யாரும் கவனிக்கிறார்களா என்பதிலும் நாங்கள் அக்கறை செலுத்தவில்லை. அந்த இசை அப்படி எங்களின் சூழ்நிலையை மறக்கச் செய்திருந்தது.

சில நிமிடங்கள் நீடித்த அந்த இசை,வேகமெடுத்த காட்டாற்றின் பிரவாகம்போல இருந்தது.அதில் இருந்த துள்ளலும்,சுழலும் அப்படியே இசையோடு எங்களை இழுத்துப் போனது. இசையில் ஒலித்த ஒவ்வொரு தாளத்தையும் முற்றிலும் அனுபவித்துவிடவேண்டும் என எங்களின் கவனிப்பு மிகக் கூர்மைப்பட்டிருந்தது.
அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டுமென நினைத்த மாத்திரத்தில், ‘காட்டாற்றில் குதித்தவன்,அதன் போக்கிற்கு வாகாய்,தனது கைகளையும், கால்களையும்,உடலையும் இயக்குபவனைப் போல’ மனமும் துள்ளிக் கொண்டிருந்தது.அதற்கு சற்றும் சளைக்காமல் எங்களின் கால்களால்,வெறும் தரையில் இடப்பட்டுக் கொண்டிருந்த தாளமும் வேகமெடுத்திருந்தது.
என்னவொரு ஆச்சரியம்.? அந்த இசை ஒலித்த மண்டபத்திற்குள் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் அனைவருமே அதே உணர்வுக்கு ஆளாகியிருந்தார்கள் என்பதை துல்லியமாக உணரமுடிந்தது. காரணம்,பார்வையாளர்கள் தங்கள் கால்களால் எழுப்பிக் கொண்டிருந்த தாளத்தின் ஒலியும், இசைக்கருவிகளின் தாளத்திற்கேற்ப ஒரே சீரானவகையில் ஒட்டுமொத்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

அனைவரையும் ஒரே உணர்வில் கட்டிப்போட்ட அந்த இசையின் லாவகத்தை நினைத்து நினைத்து நான் மாய்ந்து போனேன்.எப்படி முடிந்தது. இப்படியொரு இசையை அவர்கள் இசைக்க.?

இந்த பிரமிப்புக்குள் நான் மூழ்கி மூச்சுத்திணறிக் கொண்டிருந்தபோதே,இசை உச்சஸ்தாயியை அடைந்தது.காட்டாறு இப்போது மிகப்பெரும் மலையுச்சியிலிருந்து 'ஹோ' வென விழும் நீர்வீழ்ச்சியைப் போல,இடைவிடாமல் ஒலித்தது.அதுவே சற்றுநேரத்தில் அனைவரையும் அச்சமடையச் செய்யும் இடியோசையாக மாறி முழங்கியது. இசையின் எதிரொலியாக இதயமும் வேகமாகத் துடிக்கத் தொடங்கிவிட்டது.
இப்போது கால்களால் நான் தாளமிடுவதை நிறுத்திக் கொண்டிருந்தேன். மண்டபத்திலிருந்த அனைவருமே அப்படித்தான் இருந்தார்கள்.

தாள வாத்தியங்களை இசைத்துக் கொண்டிருந்த இளைஞர்களின் நெற்றி,முகம்,உதடு,வாசித்துக் கொண்டிருந்த கைகள் என வியர்வைத்துளிகள் சொட்டுவது,மேடையின் முகப்பு விளக்கின் ஒளியில் நன்றாகத் தெரிந்தது.அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தது.

ஆனால்,இதை எதையும் பொருட்படுத்தாத அந்த இளைஞர்கள்,தொடர்ந்து இடியோசையாய் தங்கள் இசையை முழக்கிக் கொண்டிருந்தார்கள். பார்வையாளர்கள் யாரையுமே அவர்கள் பொருட்படுத்தவில்லை. தங்கள் வாசிப்புத்திறனை முழு அளவில் அவர்கள் வெளிப்படுத்தவே முயற்சித்துக் கொண்டிருப்பதாகவே பட்டது. இந்த இடியோசையின் துவக்கத்திலிருந்த தாளகதியின் சீரான வேகம் இன்னும் கூடியிருந்தது.

மண்டபத்திலிருந்த குழந்தைகள் அப்படியே உறைந்துபோய் பார்த்துக் கொண்டிருப்பதும், இன்னும் சில குழந்தைகள் தங்கள் தாய் மற்றும் தந்தையரின் மார்போடு ஒட்டிப் பதுங்கிக் கொண்டிருப்பதும் தெரிந்தது.

ஏறக்குறைய குழந்தைகளின் நிலையிலேயே நாங்களும் இருந்தோம்.காதுகளின் வழியாகப் பாய்ந்து கொண்டிருந்த இசையின் அதிர்வு,நேராக இதயத்தைப் போய்த்தாக்கிக் கொண்டிருந்தது. அதன் வேகம் தாளாத இதயம் எந்தநேரத்திலும் தெறித்து வெளியே விழுந்துவிடுமோ என அச்சம்கூட ஏற்பட்டது.

இசை என்பது இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தமுடியுமா.? இதுவரை நான் இதுபோன்ற இசையைக் கேட்டதில்லை.தென்றலாய்த் தொடங்கி,புயலாய் உருக் கொண்டு,தன்னைச்சுற்றி இருக்கும் அனைத்தையும் நொறுக்கித்தள்ளி, மேலும் பாய்ந்து வானத்திற்கும்,பூமிக்குமாக வியாபித்து நிற்கும் பெரும் ஊழிக்காற்றைப்போல இசையும் உருக் கொள்ளமுடியுமா.? உருக்கொண்டது.அதனை அங்ஙனமே நான் உணர்ந்தேன்.

அந்த விநாடியில்,படார் என்று சார்த்திய கதவின் பின் மறையும் காட்சிபோல, இசைமுழக்கம் சட்டென நின்றது.
அப்பாடா.! வானம்நோக்கிப் பாய்ந்த விநாடியில்,சடாரென தரையை நோக்கி நம்மைத் தள்ளிக் கொண்டு போகும் ராட்சத ராட்டினத்திலிருந்து இறங்கி,தள்ளாட்டத்துடன் தரையில் கால்பரப்பி நின்று நிலை கொண்டு விட்டது போலத்தான் இருந்தது.

உஷ்..,நன்றாய் மூச்சைவிட்டுக் கொண்டு ஆசுவாசப் படுத்திக்கொண்டேன்.ஏறக்குறைய எனது நண்பர்களும் அப்படித்தான் இருந்தார்கள்.
ஒட்டுமொத்த மண்டபமும் அதே உணர்வை அனுபவித்துக் கொண்டிருந்திருப்பார்கள் போலிருக்கிறது.அங்கு நிலவிய பேரமைதி அதனையே உணர்த்தியது.

ஒருவழியாய் நனவுலகத்திற்கு வந்தோம். முதல்வேலையாய் எனக்குள் இத்தனை மாற்றங்களையும் ஏற்படுத்திய அந்த இசைக்குழு இளைஞர்களைப் பாராட்டி விடவேண்டும் என அவர்களை நோக்கிச் சென்றேன்.

அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை ஒழுங்காக எடுத்துவைப்பதில் முனைந்திருந்தார்கள்.நான் அருகாமையில் சென்றபோதும் அவர்கள் என்னைக் கவனிக்காமல் தங்கள் வேலையிலேயே கவனமாயிருந்தார்கள். யாராவது ஒருவரை முதலில் அழைத்து எனது பாராட்டுக்களை தெரிவிக்க முடிவு செய்து,அந்த இசைக் கலைஞர்களில் சற்றே மூத்தவராயும்,உயரமாயும் இருந்த ஒருவரை அழைத்தேன். நான் அழைப்பது குறித்து அவர் அக்கறையே கொள்ளவில்லை. இரண்டு மூன்று முறை அழைத்தும் அவர் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை.

எனக்கு சற்றுக் கடுப்பாயிருந்தது.சரி வேறு ஒருவரையாவது அழைக்கலாம் என்று நினைத்து மற்றொருவரைத் தேர்வு செய்து அழைத்தேன். அவரும் அதேபோல தன் காரியமே கண்ணாயிருந்தார். மற்றவரின் மனங்களைக் கட்டிப்போடும் இசையைத் தரத் தெரிந்தவர்களுக்கு இங்கிதம் தெரியவில்லையே..! திறமையால் விளைந்த திமிரோ..? எனது கோபத்தீயின் நுனி மெதுவாய் கனன்றது.

“யேய்..”என்று அவர்களில் யாராவது ஒருவரை,நான் அழைக்கத் துணிந்த அந்த விநாடியில்..,எனக்குப் பின்னாலிருந்து,மணமகளின் தந்தையின் குரல் கேட்டது. “தோழர் அவசரப்படவேண்டாம்.கண்களால் பார்க்க முடியாதவர்கள் போல,காதால் கேட்க முடியாத மாற்றுத்திறனாளிகள்தான் இவர்கள்..,நீங்கள் அவர்களிடம் பேசுவதாயிருந்தால் அருகில் சென்று தொட்டுப்பேசுங்கள்” என்றார்.

எந்த இசைக்கருவியும் இசைக்காதபோதும் இம்முறை அதிர்ச்சியில் எனது இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்கியது.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (5-Dec-12, 11:43 pm)
பார்வை : 302

மேலே