உணர்!

ஈடேற்றம் என்பதுவே
வழிபாட்டின் நோக்கமெனில்
அழித்தொழித்தே மாற்றார்க்கு
ஆக்கினைகள் செய்திடில்
எங்கனமோ சித்திக்கும்!

இறையோடு ஒன்றுதலே
மறைநாடும் நம்விருப்பெனில்
இறையென பிறரேற்றும்
தெய்வம் உறைகின்ற
இல்லினை அழித்திடில்
இறையொடு இணைதல்
இயலுதல் ஆகுமோ!

மானிடத்தின் மேன்மைக்கு
வழிகோலும் மதமெனில்
மானிடரின் அழிவினில்
மதமேன்மை நாட்டல்
எவ்வகை சேர்த்தி!

பிரம்மமே யாவுமெனில்
ஓரங்கம் ஆன்மாவெனில்
அடித்து அழித்து ஒழித்து
ஏனிந்த கூத்தோ!

வழிவேறாய் ஆகிடினும்
சேருமிடம் ஒன்றெனவே
தேருவர் எனில்
கூறுகள் அகற்றிட
பொதுமை இயலுமே!

எழுதியவர் : அழ.பகீரதன் (8-Dec-12, 10:34 pm)
சேர்த்தது : அழ.பகீரதன்
பார்வை : 179

மேலே