என் நண்பனுக்கு எழுதி அனுப்பப்படாத கடிதம்...

அண்டவெளியில்
புவியீர்ப்பு விசை பெறா பொருள் போல
பள்ளி கூடத்தில்
தாய் ஈர்ப்பு விசை பெறாமல்
நான் தவித்து அமர்ந்திருந்தேன்
அழுதுகொண்டே...
முதன்முதலாக
முதல் நாள் பள்ளி வகுப்பறையில்...

என்னருகே
நீ வந்து அமர்ந்தாய்...
உனை தேற்ற உன் தாய் கொடுத்த
ஒரே ஒரு மிட்டாயையும்
தந்தாய்
எனை தேற்ற...

இப்பொழுது புரிகிறதா?
"நீ சேயாய் இருக்கையிலேயே
என் தாயாய் உருவெடுத்தாய்"
என்பது...

அரைமணி நேர வாடகைக்கு மிதிவண்டியை வாங்க
அரை ரூபாயை
அரை நாள் மன்றாடி பெற்றாய் சிறுவயதில்
அரிசி வாங்க கூட காசில்லா உன்
அன்னையிடம்...

அதில்
நானும் ஓட்டப்பழகுகிறேன் என்பதனை
அவள் கண்டால் தடுத்திடுவாளோ
என உனக்குள்ளேயே அஞ்சி,
சாக்குபோக்கு சொல்லி
நாலைந்து தெரு தள்ளி
எனக்கும் பழக வைத்தாய்.

மிதிவண்டியை நான் உந்திசெல்லும்
ஒருகட்டத்தில்,
பிடிக்காமலேயே
பிடித்திருக்கிறேன்
பிடித்திருக்கிறேன்
என தைரியம் சொல்லி
என்னோடு ஓடிவந்து
உன்மூச்சிரைத்தாலும்,

வீழாமல் நான் செல்லும் அழகை கண்டு
நீ புன்முறுவல் இட்டபோது
என் தந்தையாகவே
மாறினாய்
என்பதனை அறிவாயா நீ?

இனப்பெருக்கத்திற்காக
இறைவன்
தந்த
ஒரு சாதாரண
ஊக்கப்பொருள் தான்
காதல்
என்று அறிந்திருந்தும்

விருப்பப்பட்டே
திசை மாறிப்போன
ஆடுகளாய்
ஆளுக்கொரு இலக்கு நோக்கி
இடம்பெயர்ந்தபோது,
நாகரீக வாழ்வின்
கைபேசியுலும்
கணிப்பொறியிலும்
மட்டுமே நமது நட்பு
முடங்கி
அநாகரிகமானது.

பருவமும் ஓடியது...
சறுகாக மாறுவதற்கு
முன்னே இன்னும்
ஓர் உயிர் பெற்றது
நம் நட்பு
இன்று…

எழுதிவிட்டேன் என் உயிலை...
இளமையிலேயே...
நீயே எனக்கு
கொள்ளியிட வேண்டும் என்று ...

என் எண்ணப்படி,
உனக்கு முன் நான் மரணித்தால்
வைப்பாயா
எனக்கொரு கொள்ளி
நண்பா எனச்சொல்லி?

செய்ததும்,
எடுத்துரைப்பேன்
இவ்வுலகிற்கு
இறந்தபின்னும்..
நீதான் நல்லுரவென்று
நீ வைத்த கொள்ளியில்
எரிந்துகொண்டு...

இப்படிக்கு,
தமிழ்செல்வன்

எழுதியவர் : தமிழ்செல்வன் (11-Dec-12, 6:27 pm)
பார்வை : 750

மேலே