இரண்டாம் நாள் ராத்திரி-கே.எஸ்.கலை

(அந்த ஐந்து நாட்கள் பதிவின் தொடர்ச்சி....)
.....
இப்போது அரங்கினுள் அருகருகே....எல்லோரும் வார்த்தைகளை அங்கும் இங்கும் சிதறவிட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தோம்.....
சலனமின்றி இன்னுமொரு அறிமுகம்...
ஹஹஹ்ஹா...இது துபாய் நாட்டு சோடி....
எங்கே, எப்படி இந்த அரங்கினுள் நுழைந்தார்கள் என்று தெரியவில்லை...
முதல் சந்திப்பில் காட்டும் இடைவெளி சற்றும் இல்லாமல் “டேய் கலை”..குரல் கேட்கிறது....குரலில் பாசமும் உரிமையும் கலந்திருந்தது...எழுத்து முகப்பில் உருவத்தைக் கொஞ்சம் கண்டிருக்கிறேன்....சுதாகரித்துக் கொண்டேன்....
ஹாய்...”யாத்விகா தானே” நான் தொடர்ந்தேன்....ஆமாம்...சொல்லிக் கொண்டே பக்கமிருந்த நாற்காலியில் பவ்வியமாய் அமர்ந்துக் கொண்டாள் தோழி யாத்விகா கோமு...சில அறிமுக வாசகங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்து வைத்தாள் தன் அன்புக் கணவரை....
பெயர் சொல்லி அறிமுகம் செய்தால் இன்னார் தான் இவர் என்று அறிந்துக் கொள்ளும் அளவிற்கு குடும்பத்தினுள்ளும் படைப்பாளிகளைப் பரிச்சயம் செய்து வைத்திருக்கிறார்களே என்று பெருமிதம் கொண்டேன்...
யாத்விகாவின் கணவரும் சக படைப்பாளியைப் போல எங்களுடன் சகஜமாய்ப் பழகிய நிமிடங்கள் சந்தோசம் தந்தது....
இப்படி ஒரு கணவன் ஒரு பெண் படைப்பாளிக்குக் கிடைப்பது “செய்த புண்ணியத்தின் பயன்” என்று தான் சொல்ல வேண்டும்....
இப்போது எங்கள் குடும்பம் ஒன்றானது...
ஒருவருக்கொருவர் மாறி மாறி வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டிருந்தோம்....
விழாவின் ஆரம்பம் “கேட்காத தாளங்களுடன்” அமர்களமாய்த் தொடங்கியது...லயித்தோம்...எங்களை நாங்களே மறந்தோம்...
ஒரு அழகிய விழாவிற்கான அனைத்து அம்சங்களுடனும் பெரியோர்களால் அலங்கரிக்கப்பட்டது எங்கள் திருவிழா....
வெளியீட்டு விழா எங்கள் அனைவரினதும் கலை வாழ்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்..
காரணம் அங்கிருந்த எல்லா படைப்பாளிகளும் இதுவரைக்கும் தமது படைப்புக்களை புத்தக வடிவில் செய்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்..
இந்த அரிய பெரிய விடயத்தினை செய்த தோழர் அகன் அருகருகே இருந்த இரட்டை மேடைகளில் அங்கும் இங்கும் “குட்டிப் போட்ட பூனையைப்” போல ஓடிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது சில நேரம் “பாவம் இந்த மனுஷன்” என்று என்னுள்ளே நான் சொல்லிக் கொண்டேன்...என்னவோ தெரியவில்லை உடனே மனதுக்குள் “அப்டி மட்டும் சொல்லாதடா கலை...பெருசு பொல்லாத ஆளு” என்று இன்னுமொரு வாசகமும் முணுமுணுத்தது....
(அது என்னவோ தெரியவில்லை எனக்கு பிடித்த யாரையும் எந்த நேரமும் குறை சொல்லிக் கொண்டே இருப்பதில் எனக்கொரு சந்தோசம்...சிலர் புரிந்துக் கொள்வார்கள்...சிலர் புரியாமல் “கொல்”வார்கள்.....)
◥⊙▲⊙▲⊙▲⊙▲⊙▲⊙▲⊙◤◥⊙▲⊙▲⊙▲⊙▲⊙▲⊙▲⊙◤◥
உள்ளம் திறந்து சொல்வதாயின் பெரிய சிரமத்திற்கு மத்தியில் தோழர் அகன் இந்த பணியைச் செய்கிறார்... செய்துக் கொண்டிருக்கிறார்....இன்னும் செய்வார்...என்று எந்த சந்தேகமும் இன்றி சொல்ல என்னால் முடியும் தோழர்களே...
“அவரின்
அர்ப்பணிப்பிற்கு
நிகராய் நிற்க இங்கே
யாருமில்லை”
என்று நான் சொல்ல மறுத்தால்....
ச்சே....
என்னை நானே வெறுக்க வேண்டி வரும்....
◥⊙▲⊙▲⊙▲⊙▲⊙▲⊙▲⊙◤◥⊙▲⊙▲⊙▲⊙▲⊙▲⊙▲⊙◤◥
நெடுநாள் காத்திருந்த அந்த அழகிய விழா கெளரவவிப்புக்களுடன் இனிதே நடந்து முடிந்தது...இந்த விழா பற்றி பேசலாம் பேசிக் கொண்டே இருக்கலாம்....பேசுவோம்...!
இப்படியே சில மணித்தியாலங்கள் மேடை நிகழ்வுகளுடன் முடிய மீண்டும் கூட்டணி சேர்ந்தது எங்கள் குழாம்...
இரவு உணவிற்காக எல்லோரும் ஒன்றாய்.....இல்லை இல்லை என்னை மட்டும் விட்டுவிட்டு பந்தியில் முந்திக் கொண்டு “பகல் சாப்பிடாப் பிராணிகளாய்க்” காட்சியளித்தார்கள் எல்லோரும்....
நான் எங்கே போயிருந்தேன் என்று தெரியவில்லை... கொஞ்சம் தாமதமாக வந்தாலும் தாராளமாக சாப்பிட்டேன் !
என்னை கவர்ந்த வித்தியாசமான அனுபவங்களில் தமிழ்நாட்டு உணவு பரிமாறலும் ஒன்றாக இருந்தது....ஒற்றை வயிறோடு வந்தது எவ்வளவு பெரிய தப்பு என்று கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது...!
இராப்போசனம் முடிவடைய யாத்விகா தன் கணவருடன் எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்....
சரி...யாத்விகா பிள்ளைகளை வீட்டில் விட்டு வந்தார். அதனால் போகிறார்...போகத் தான் வேண்டும்... எந்த சிக்கலும் இல்லை...
ஆனால் இந்த வினோத் கண்ணன் யாரை விட்டு வந்தாரோ தெரியவில்லை..அப்படி ஒரு அவசரம் அங்கிருந்து போவதற்கு...அவர் அங்கிருக்கும் வேளையில் அவருக்கு கைப்பேசியில் அடிக்கடி தொல்லைக் கொடுத்த அந்த அழைப்பு காரணாமாக இருக்கலாம் என்றெண்ணுகிறேன்...
(வினோத் பக்கம் மெதுவாய் சென்ற போது ஒரு இளம் பெண்ணின் குரல் கேட்டது கைப்பேசியின் வாயிலாக எனக்கு...அதுவாகத் தான் இருக்கும் அந்த அவசரத்தின் காரணம்...{நான் சொல்வதெல்லாம் உண்மை... உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை})
இப்போது மீதமிருந்த தோழர்கள் சகிதம் விடுதியை நோக்கி மெதுவாய் நடக்கத் தொடங்கினோம்....
விடுதியில் கொஞ்ச நேரம் கழித்து தொடங்கிய தோழர்களின் அரட்டை மறுநாள் காலை ரெண்டு மணி வரைக்கும் நீடித்தது....வெகு சுவாரஸ்யமாய் விறுவிறுப்பாக நடந்த கருத்துப் பரிமாறல்கள்...மூன்றாம் நாளை தொடக்கி வைத்து...அமைதியானது....
====மூன்றாம் நாள் காலை முதல்==== தொடரும்===