பறவைகளே..!!!
விமானங்களின்
மூதாதையர்களே..!
ராக்கெட்களின்
தாத்தா பாட்டிகளே.!
செயற்கை கோள்களின்
தாய் தந்தையர்களே.!
ஜெட்களின்
சகோதர சகோதரிகளே.!
பூமித் தடத்தில்
விபத்துக்கள் குறைக்க
ஆகாய மார்க்கம் கண்ட
போக்குவரத்து வல்லுனர்களே..!
உங்கள் பயணத்தில்
நீங்களே வாகனம்
நீங்களே பயணி.!
எப்படி
உங்களால் மட்டும்?
சிறகுகளை
கட்டிக் கொண்டு
மனிதனுக்கு முன்
மானம் மறைத்த
சிறகிகளே..!
வானிலை மாற்றங்களுக்கேற்ப
வாழ்விடம் மாற்றிக் கொள்ளும்
வாழ்க்கை தந்திரிகளே.!
பறந்து பறந்து
உழைக்கும் உழைப்பாளிகளே.!
கடப்பிதழ் இன்றி
நாடு கடக்கும்
நல்லெண்ணத் தூதுவர்களே.!
மின்சார இருக்கையில்
மிடுக்காக அமர்ந்து கொள்ளும்
விருந்தாளிகளே.!
அலுமினியங்களுக்கு
பறக்கச் சொல்லித் தந்த
நீங்கள்
எங்களுக்கு மட்டும்
சொல்லித் தராதது
ஏனோ..?