அழியும் உலகம்
ஏதேனும் மூளை முடுக்குகளில்
தென்பட்டால்
மறுகணமே
மஞ்சள் துண்டு கட்டி
மகமாயி ஆக்கிடுவோம்
பகுத்தறிவாளிகள் தீர்மானம்.
மரம் வளர்க்க
வேறு வழியில்லை.
பூமியின் புறமுதுகில்
ஓட்டை விழும்படி
துளையிட்டு
குழாய் பதித்து
நீர் உறிஞ்சும்
பண்ணையார்.
பக்கத்து வீட்டு உழவன்
தாகத்தில் இறந்த செய்தியறிந்து
காவேரி நீர் தராத
கர்நாடக அரசை கண்டித்து
அரசியல் பேசுகிறார்.
வளி மண்டலமெங்கும்
வாகன புகை
இருமி கொண்டே
சாலையோர பூக்கடை
சிறுமி.....
நிமிடத்திற்கொரு முறை
நீர் தெளிகிறாள்
தூசி படிந்த பூக்கள் மீது.
நச்சு புகை கூட்டம்
பிஞ்சு காற்றை கற்பழிக்க
ஓசோன் படல
ஓட்டை விட்டம்
ஓங்கி கிழித்தபடி
பல்லிளிக்கும்
வெறிபிடித்த வெப்பம்.
பொது சிந்தனைகளை
அடித்தொழிக்கிறது
வியாபார புத்தி
கனரக வாகனம்
கடத்தல் பொருளாய்
ஆற்று மணல்.
அடுத்த வருட
அதிரடி சலுகை
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு
ஒரு லிட்டர் குடிநீர் இலவசம்.
தாகத்தில் இறந்தவர்
எண்ணிக்கை
தணிக்கை செய்யப்படும்.
மழைநீர் சேகரிப்பு தொட்டி
நிலத்தடி நீர் உள்ள பகுதியென
விலை நிலங்கள் விற்கப்படும்.
மலடன் மலடி என்று
மண்ணில் எவருமில்லை
மரம் வளர்த்தல்......
இவ்வாறு கவிஞர்கள் எழுதக்கூடும்.
எதிர்த்து கேட்காத
எல்லா சமூகத்தின் மீதும்
அணுஆயுத குண்டுகள் வீசி
சோதித்தாயிற்று.
ஆறு ஓடை நிரம்பிய
மண்ணின் மடியெங்கும்
அணுக்கழிவுகள்.
தொண்டை குழியில்
நெகிழி பைகள் சிக்கி
மண்ணும்
மற்ற உயிரும்
மரணத்தை தழுவுகிறது.
உணவு சங்கிலி தொடரில் இருந்த
உயிரினங்கள் ஒவ்வொன்றாக
அழிகிறது.
சுற்று சூழல் அழிவுக்கு
காரணமாகவோ
துணை நின்றோ
வேடிக்கை பார்த்தோ
மாந்தர் கூட்டம்
உலகம் அழிகிறதென
இன்று கூச்சல் போடுகிறது.
தனிப்பட்ட மனிதனின்
கூட்டமைப்பே உலகம்.
ஒருபோதும் இது
காலத்தின் கட்டளை அல்ல.
பல நூற்றாண்டுகளாய்
தனிப்பட்ட மனிதர்கள்
மேற்கொண்ட தற்கொலை முயற்சியே
உலகத்தின் அழிவு.
அழித்துவிட்டு
பலியை காலத்தின் மீது
சுமத்துகிறது
மனித புத்தி.
---- தமிழ்தாசன் ----