மின்வெட்டை கண்டித்து தமிழகம் முழுதும் திமுக வினர் ஆர்ப்பாட்டம் ..! பெரிய மோசடித்தனமா இந்த ஆர்ப்பாட்டம்..?
மின்வெட்டை கண்டித்து தமிழகம் முழுதும் திமுக வினர் ஆர்ப்பாட்டம் ..! பெரிய மோசடித்தனமா இந்த ஆர்ப்பாட்டம்..?
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டினை சமாளிப்பதில் மாநில அரசுக்கு அக்கறை இல்லை என்று குற்றம் சாட்டியிருந்த திமுக, இது குறித்து மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த ஆர்ப்பாட்டங்கள் என்று தெரிவித்திருந்தது தனது செயற்குழுவில். ஆர்ப்பாட்டம் மாநிலம் தழுவிய அளவில் நடத்தினார்கள்.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
1999 - ல் இருந்தே மத்திய ஆளும் அரசில் ஒரு முக்கிய கூட்டணி கட்சியாக இருந்து வரும் திமுக, மாநிலத்திலும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்துள்ள கருணாநிதி கட்சியினர், மாநிலத்தில் இருக்கும் பொழுதும் ஒன்றும் செய்யவில்லை. நிரந்தரமாக இந்திய அரசு அதிகாரத்தில் இருந்து வரும் திமுக, தானும் செய்யவில்லை தள்ளியும் படுக்கவில்லை என்பதைப் போல செயல்பட்டுக் கொண்டுள்ளன.கடந்த தமிழக அரசில் கூட மின்வெட்டு பிரச்சனைக்கு ஒரு சிறு புல்லையும் புடுங்கவில்லை. ஜெயலலிதாவைப் பற்றி இவரும் இவரைப் பற்றி அவரும் லாவணி பாடுவது என்பதை மட்டும் ஆட்சி மாறும் பொழுதெல்லாம் கூறி வருகிறார்கள்.
ஒரு பதிவர் சொல்வதைப் போல, ஃ பாஸ்ட் ஃ புட்டை எதிர்த்துப் போராடும் கே.எஃ ப் சியைப் போல,கூல் ட்ரிங்க்ஸ் -ஐ எதிர்த்துப் போராடும் பெப்சியைப் போல, தொலைக்காட்சிகளை எதிர்த்து போராடும் சன் நெட்வொர்க் கைப்போல, ஊழலை எதிர்த்து போராடும் மு.கருணாநிதியைப் போல, இந்த மின்வெட்டை எதிர்த்து போராட்டமா..?
அப்படி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இப்படி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற காங்கிரஸ் கொள்கைக்கு, வாக்கெடுப்புக்கு முன் இவ்வாறு கூறினார்.சஸ்பென்ஸ் இல்லாவிட்டால் சினிமா ஓடுமா..? சுவராசியம் இருக்குமா..? என்றார். பொதுவில் சிந்தனை செயல் அனைத்தும் சினிமாவை நோக்கியே இருக்கும் சினிமாக்காரர்களுக்கு, நம்ம தலைவர் தான் சினிமாவில் பாதி காலும் அரசியலில் பாதி காலும் வைத்தவர் ஆயிற்றே.அரசியலுக்கு சினிமா விளக்கமும் சினிமாவிற்கு அரசியல் விளக்கமும் கொடுப்பவர் ஆயிற்றே.
ஆக, திமுக விற்கு சில்லறை வணிகத்தில் எந்த சிறு வியாபாரி பாதித்தால் என்ன..? பாதிக்காவிட்டால் என்ன..? சில்லறை வியாபாரி தானே.., அவர்களை எப்படி மடை மாற்றுவது எனபது பெரிய வியாபாரியான திமுக விற்கு தெரியாதா என்ன..? அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் மதவாத கட்சி ஆட்சிக்கு வந்து விடும் என்று ஒரு இத்துப்போன கருத்தை சொன்னார். சிறுவியாபாரிகள் நம்பவில்லை. உடனே அதை திசை திருப்ப இல்லை, வால்மார்ட்காரர்கள் அங்கே கடையும் இங்கே குடோனும் வைத்து விட்டார்கள் என்று கூவியதோடு தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பதறினார். அப்படி ஒரு சஸ்பென்ஸ் அல்ல நாடக சீனை போட்டார்.யாருமே கண்டுகொள்ளவில்லை என்று கருதியவுடன், டாமாரென்று மின்வெட்டை எதிர்த்து அமைதியான ஆர்ப்பாட்டம் என்றார்.இவர் ஆதரித்து விட்டார் வால்மார்ட் கம்பனி வருவதை வாக்கெடுப்பில். தமிழ் நாட்டில் வால்மார்ட் வந்து விட்டது என்றால் என்ன அர்த்தம்..?
இவரின் இந்த கூத்துக்கு அதிமுக கட்சியில் இணைந்து தமிழகம் முழுதும் கொள்கை விளக்கம்..?! பிரச்சாரம் புறப்பட்டுவிட்ட நாஞ்சில் சம்பத் விளக்கம் அளிப்பார். என்றாலும் நமது விளக்க உரை என்னவெனில், செயற்குழுவில் பலர் நாம் இந்த வால்மார்ட் - ஐ அனுமதித்து வாக்கு அளிக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். சரி சரி என்று சும்மா இருந்து விட்டு, அறிவாலயத்தில் ஆதரித்து கொறடாவுக்கு உத்தரவை போட்டு விட்டு, இவ்வாறு விளக்கம் அளித்திருப்பார் சுற்றி உள்ள நெருங்கிய குடும்பத்தினரிடம், சும்மாவே எதிர்கட்சி தலைவர் மாவட்டம் மாவட்டமாக கையெழுத்து போட்டு வருகிறார். மத்தியில் ஆதரிக்காமல் நாமும் சிறைக்கும் கோர்ட்டுக்கும் போலீஸ் நிலையத்திற்கும் மாவட்டம் மாவட்டமாக அலைய சொல்கிறீர்களா..? என்று கூறி இருக்க மாட்டாரா இல்லையா..? என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
சங்கிலிக்கருப்பு