காத்திருக்கிறது...சுதந்திரம் ....கையில்....?
மீளாத்துயரத்தில்...
அழுது கொண்டிருக்கிறது...
நீங்கள்...
அறுபத்து நான்கு ஆண்டுகளாகக்
கொண்டாடிக் கொண்டிருக்கும்...
சுதந்திரம்.
தெருவில்...
நடந்து செல்லும் பெண்களுக்கு
பாதுகாப்பில்லை.
பேருந்தில் செல்லும் பெண்ணுக்கும்
பாதுகாப்பில்லை.
பெண்ணிற்கு அப்பனிடம் பாதுகாப்பில்லை.
அண்ணனிடமும்...அடைக்கலமில்லை.
கடவுளை வெளியேற்றிவிட்டு...
காமம் சொல்லித்தரும்...
கர்ப்பக்கிரகங்கள் பெருகிவிட்டன...
உங்களின் சுதந்திர நாட்டில்.
நீங்கள்...
உங்களின் சுதந்திரத்தினால்..
கொணர்ந்த அந்நிய நாட்டின் புதுமைகள்..
நம் அடையாளங்களின்...
கற்பை அசைத்து ரசிக்கின்றன.
தேர்தல்களுக்கு வழிகோலிய சுதந்திரம்...
நேர்மையைத் தின்று...
வயிறு வெடிக்கச் சிரிக்கிறது....
உங்களின் வாக்களிக்கும் அழகினை நினைத்து.
முன்னேற்றப் பாதையில் செல்வதாய்
சொல்லப்படும் உங்களின் சுதந்திரத்திற்கு..
நான்கு பக்கமும் நீங்கள் வைத்திருக்கும்
வேலிகள்....
ஒருபோதும் கண்ணுக்குத் தெரிவதில்லை.
அறுபத்து நான்கு ஆண்டுகளாய்...
குருடாய்த் திரியும்....
உங்களின் சுதந்திரம்...
அதைப் பற்றிக் கவிதையும்...
அதன் பிறந்த நாளுக்கு மிட்டாயும்
கொடுத்துத் திரியும் என்னை...
செருப்பாலடிக்கக் காத்திருக்கிறது...
இன்று வரை துடைக்கக் கையில்லாத
கயவர்களின்...
துன்பங்கள் பெருக்கிய கண்ணீரோடு.