!!!====((( நினைவலைகள் 6 )))====!!!
வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ (படபிடிப்பு) நிறுவனத்தின் முன் வாயிலுக்கு எதிரே இருக்கும் கேம்ப்பஸ் ஹோட்டல் வாசல்தான் தினமும் எங்கள் நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடும் இடம், காலையில் நாங்கள் அனைவரும் அங்கே ஒன்றுகூடி எங்கு செல்லலாம் என்று தீர்மானித்து பிறகு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வோம், மாலையில் பிரிந்து சொல்லும்பொழுதும் அதே இடத்தில் அனைவரும் கூடி பேசிவிட்டு, மறு நாளுக்கான வேலையை தீர்மானித்துவிட்டு பிறகு செல்வது வழக்கம்.
இந்த நேரங்களில் பணம் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும் சேர்த்து தேநீர் வாங்கி தருவது, வடை வாங்கி தருவது இப்படி அனைவரும் ஒருமித்து எங்கள் தேவைகளை நிறைவேற்றிகொள்வதும் வழக்கமான ஒன்று, சாலிகிராமாம் பிரசாத் ஸ்டுடியோ காம்பௌண்ட் சுவருக்கு அருகில் இருக்கும் தள்ளுவண்டி கடையில்தான் எங்களின் பசியை பெரும்பாலும் நாங்கள் போக்கிகொண்டோம் என்றால் அதுதான் நிதர்சனம்.
அது ஒரு மாசிமாதம், உடல்நடுங்கும் குளிர் பின்னிரவு மூன்றுமணி, 54 கிலோ எடை இருந்த நான் 160 கிலோ பீட்ரூட் மூட்டையை தோளில் சுமந்துகொண்டு ஏணி வழியாக லாரிமேல் ஏறிக்கொண்டு இருந்தேன், அப்பொழுதுதான் தோன்றியது....
அழகே அழகே
ஆழ்கடல் அழககே
ஆனந்த பூமழையே....
நிலவே நிலவே
நீயெந்தன் உறவே
நீரோடை பூங்குயிலே....
என்ற இந்த வரி அந்த நேரத்தில் எனக்குள் தோன்றியது, அதற்கு ராகமும் அப்பொழுதே கிடைத்தது, காலையில் இசையமைப்பாளரிடம் இந்த நான்கு வரிகளை பாடிக்காட்டினேன், அட நன்றாக இருக்கிறதே, பாடலை முழுமையாக எழுதுங்கள் படத்தில் பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறினார், நானும் பாடலை ஒரு நாள் முழுக்க யோசித்து பாடலை முழுமையாக எழுதி முடித்தேன்.
-----------------பல்லவி---------------------
அழகே அழகே
ஆழ்கடல் அழகே
ஆனந்த பூமழையே...
- - - நிலவே நிலவே
- - - நீயெந்தன் உறவே
- - - நீரோடை பூங்குயிலே...
ஒருசோலை உன்சேலை
உன்பிறப்பே புதுமையடி..ஓ...ஹோ ...
உளிபோலே உன்பார்வை
அதுஎன்னை செதுக்குதடி ..ஓ ...ஹோ...
- - - மேகம் போலே உந்தன் கூந்தல்
- - - என்னை மூடாதோ...
- - - இசையால் மயங்கும் உந்தன் மனது
- - - என்னை தேடாதோ..... (அழகே அழகே)
---------------சரணம் 1-----------------
அதிசயம் இங்கே ஏழென்று
யாரடி சொன்னது...
அதிசயம் எல்லாம் உனைகண்டு
அசந்து போனது...
ஓவியமொன்று எழுந்து வந்து
என்முன் நின்றது...
ஆலிலைத் தென்றல் உனைகண்டு
வியந்து போகுது...
தூரல்போடும் மாலைநேரம் உந்தன் நியாபகமே
கோடிகோடி ஆசைகள்வந்து நெஞ்சில் பொங்கிடுமே
----------------சரணம் 2--------------------
கொலுசொலி போலே அருவிகளும்
ஓசை சேர்க்குது...
தேவதை வந்தாள் என்றேதான்
உள்ளம் தேடுது...
நிலவை பார்த்தேன் எனக்குள்ளே
வெட்கம் வந்தது...
நீதான் என்று என்நெஞ்சில்
மின்னல் தோன்றுது...
வானமெல்லாம் பூக்கள்தூவி மேகம் போகிறதே
சிறகாய்மாறி வின்வெளிமேலே என்மனம் பறக்கிறதே
இப்படி எழுதி முடித்தேன், இந்த பாடலை இயக்குனரிடம் இசையமைப்பாளர் பாடிக்காட்ட அவருக்கு மிகவும் பிடித்து போனது, உடனே அவரது படத்திற்கு இந்த பாடலை கேட்டு வாங்கிகொண்டார், இது சோலோ பாடல் என்பதால் இதே மெட்டில் ஜோடி பாடலும் வேண்டுமென்று இயக்குனர் கேட்டார், அதாவது ஒரே ராகத்தில் பாடல் இரண்டுமுறை வரும், முதல் முறை தலைவன் மட்டும் தனியாக பாடுவது, காதலியோடு சேர்ந்து பாடுவது, இரண்டிற்கும் வரிகள் மட்டும் வேறுபட்டு இருக்கும். ஜோடி பாடலாக கீழே வரும் வரிகள்....
--------------------பல்லவி----------------
ஆண்; மழையே மழையே
- - - - - - மார்கழி மழையே
- - - - - - மனசுக்குள் அடைமழையே...
பெண்; சுகமே சுகமே
- - - - - - தாய்மடி சுகமே
- - - - - - அதுபோல் உன்சுகமே...
ஆண; விரல்சேர்த்து கைகோர்த்து
- - - - - - நாம்நடப்போம் வீதியிலே..ஓ...ஹோ...
பெண்; நொடிதோறும் முழுவாழ்வை
- - - - - - நாம்வாழ்வோம் காதலிலே..ஓ...ஹோ...
ஆண்
மேகம்தாண்டியும் மேலே உள்ளது
அன்பே ஆகாயம்...
நீநான் தாங்கிய தேகம் நீங்கியும்
காதலது வாழும்.... (மழையே மழையே)
-------------------சரணம் 1---------------------
ஆண்; நதியினிலாடும் நிழல் போலே
- - - - - - தொடுவேன் காதலி...
- - - - - - விழிகளை மூடும் இமைபோலே
- - - - - - அணைப்பேன் பாரடி...
பெண்; அசைந்திடும் காற்றில் இசைபோல
- - - - - - வருவேன் காதலா...
- - - - - - அலைத்தொடும் கடலில் கரைபோல
- - - - - - இருப்பேன் நானடா...
ஆண்;
இதமாய்நீயும் பார்க்கும்போது நெஞ்சம் இனிக்கிறது
இதழ்கள்மூடி சிரித்தாய் அன்பே இதயம் சிலிர்க்கிறது
--------------------சரணம் 2-------------------
பெண்; ரகசியம் கோடி உனக்குள்ளே
- - - - - - ரசிப்பேன் காதலா...
- - - - - - திரவியமெல்லாம் நான் தேடி
- - - - - - ருசிப்பேன் பாரடா...
ஆண்; புதையலை போலே உனக்குள்ளே
- - - - - - வசிப்பேன் காதலி
- - - - - - உயிரையும் கடந்து உனக்குள்ளே
- - - - - - முழுசாய் பாரடி...
பெண்;
கனவுகளெல்லாம் உன்னைத்தானே கனவில் காண்கிறது
கவிதைகளெல்லாம் உன்பேர்தானே கவிதை என்கிறது
இப்படி எழுதப்பட்ட இந்த இரண்டு பாடல்களும் பிரசன்னாவும் மஹதியும் பாட பாடல் பதிவு செய்யப்பட்டு, ஆரானின் காவல் என்ற திரைப்படத்தில் வெளிவந்தது, ஒரு விஷயம் என்ன வென்றால் ஏனோ இதில் சோலோ பாடல் படத்தில் வரவில்லை ஆனால் இரண்டாவதாய் எழுதப்பட்ட ஜோடி பாடல் மட்டும் திரைப்படத்தில் வெளிவந்தது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை copy செய்து google லில் past செய்து search செய்து பார்த்தல் எனது பாடலை இலவசமாக தரவிறக்கம் செய்து நீங்களும் கேட்டு மகிழலாம், youtube ல ஆரானின் காவல் என்று search செய்து முழு திரைப்படத்தையும் காணலாம். பாடலை கேட்ட பிறகே இங்கே கருத்தையும் பதிவிடலாம்.
aarhan-kaaval-movie-songs-free-download
aaraan-kaaval-2011-tamil-mp3-songs-download/
(நன்றிகள்! அடுத்த பாடல் பற்றி அப்புறம் கூறுகிறேன்.)