புது வருடம் பார்க்கலாம் !

கற்றும், கற்பித்தும்
காதலித்தும், பேதலித்தும்
கண்ணீரும், சிரிப்பும் கலந்து
அனுபவமாய்
என்னோடு வாழ்ந்து-
கண் திறந்து பார்ப்பதற்குள்
என்னை விட்டு
ஓடிப் போன நாட்களை
தேடிப் போனேன் !
வாடிப் போன பூக்களாய்
வழியெங்கும் சிதறிக் கிடந்தன!

என்னால் அழுதவர்கள்
என்னை அழவைத்தவர்கள்
பெண்ணுருவில் நின்றவர்கள்
பேயாய்ப் பிடித்தவர்கள்
பிரியமானவர்கள்
எரிந்து விழுந்தவர்கள்
எரித்து மகிழ்ந்தவர்கள்
எனை வீழ்த்தியவர்கள்
என்னால் வீழ்ந்தவர்கள்
இன்னும் இன்னும்
என்னோடு கலந்து வருபவர்கள்
தந்த தாக்கத்தால்
வந்த அனுபவம்
வருடங்களில் கரைந்தோட
வாழ்ந்த நினைவுகள்
வழுக்கி வழிந்தோட
முன்னே சென்றவன்
பின்னோக்கி பார்த்தேன்!
அங்கே
பிள்ளைகள் உடைத்த
பொம்மைகளாய்...
பொறுக்கி எடுப்பதற்குள்
இன்னும் சில்லுகள்
உடையும் சப்தங்கள்...
போதும் என்று வந்துவிட்டேன்!
அதற்குள்
இன்னுமொரு ஆண்டு
என்னைக் கடந்து செல்ல
இதோ காலைத் தூக்கி வைக்க
வந்து விட்டது !

சென்ற ஆண்டு
என்னை மறந்த
மரணம்
இந்த ஆண்டும்
மறந்து போகலாம் !

என்னிடம்
முகம் திருப்பிச்
சென்ற
நண்பன்
இந்த ஆண்டில்
என் முகம் பார்த்துச்
சிரிக்கலாம்

பார்க்கலாம் !
புது வருடம் பார்க்கலாம் !

எழுதியவர் : முத்து நாடன் (25-Dec-12, 12:08 am)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 223

மேலே