அண்ணன் ஜெ..வின் நினைவுக் கவிதைகள் சமர்ப்பணம் ...9

வெறும் திரிகள்

காகித வானில்
கவிதை நட்சத்திரங்கள்
கண்ணடித்து கண்ணடித்துப்
புரட்சியை வரவேற்கின்றன !

சிவப்புச் சாயம் பூசிக் கொண்ட
ஆராவாரத் தமிழ் முழக்கம்
தெருக்கள் தோறும் குறைவில்லாமல் !

எழுத்து பேச்சு எல்லாவற்றிலும்
பழுத்திருப்பவை
புரட்சிக் கனிகள் !

சந்தர்ப்பவாதக் கவசம்
பூட்டிக் கொண்டு
ஆபத்தில்லாத வாய்ப்பந்தல்களால்
ஆகாசத்தைக் கைப்பற்றுவதற்கு
எத்தனை போட்டிகள் !

புது யுகம் படைப்பதற்கான
புரட்சிகள் வெடிக்குமென்று
பிரகடனத் தீயை
இலக்கியத் திரிகளில் பற்ற வைக்கும்
மாபெரும் அணிவகுப்பு !

ஆனால்...

திரிகளின் முடிவில்
வெடிகளே இல்லை !
திரும்பத் திரும்பக்
கொளுத்தி என் பயன் ?

--அன்பளிப்பு --
ஆ .ஜெகன்

எழுதியவர் : ஆ .ஜெகன் (27-Dec-12, 4:29 am)
பார்வை : 159

மேலே