ஆதலால் புரிவீர் காதல்! பகுதி 1
காதல் மறுப்பும் காதலும்.
இந்த படைப்பு பருவம் எய்தியவருக்கும், பருவம் முதிர்ந்தவருக்கும் மட்டும்
காதல் மறுப்பு
மனித குலம் தனித்து வாழ்வை தொடங்குவது பருவ வயது அடைந்த பிறகே.
அதுவரை குழந்தை எனப் பேணப்படும் மனித குலம், அனைத்து உணர்வுகளையும் பெற்றோர், ஆசிரியர், காட்டும் வழியில் உள்வாங்கி சுய இயக்க சிந்தனைக்கு (self activation க்கு) தயாராவதில் வாழ்க்கையை நகர்த்துகிறது.
உணர்வில் சுயம் விழிப்பது பருவ வயது அடைந்த உடன் தான்.
அதில் காலத்தின் கட்டாயத்தால் இந்த சுய இயக்க தகுதி நிலை, படிப்பு என்ற பெயரில், பொருளாதார சார்பு நிலையின் அடிப்படையால் பொருள் ஈட்டும் தொடக்கம் வரை நீட்டிக்கப்படுகிறது.
தேவைகளுக்கு பெற்றோரை சார்ந்துள்ள நிலையில், உண்மையிலேயே பருவ வயது அடைந்த உடனேயே தொடங்கிவிடும் சுய இயக்கம்,
பொருள்-சார்பு நிலை போர்வையில் மட்டுமே,மறுக்கப்படுகிறது.
அதனால்தான், படிக்கும் வயதில் படிப்பை கவனிக்காமல், “காதல், கத்திரிக்காய்” என மனதை அலை பாய விடாதே” எனும் அறிவுரை வழங்கப் படுகிறது.
(தனி-சுய உணர்வு = self identity)
(இங்கு identity யை அடையாளம் என்று இல்லாமல் உணர்வு என்றே குறிப்பிட விரும்புகிறேன்)
தனி சுய உணர்வு வரும்வரை, குழந்தை பருவத்தில், அவசியங்கள் அனைத்தையும் குழந்தையின் உரிமையென கருதும் பெற்றோர், ஆசிரியர்,
தனி-சுய உணர்வு வந்த உடனே அதையும் உரிமை என்று அங்கீகரிப்பதில் தடுமாற்றம் காட்டுவதும்,
அந்த தனி சுய உணர்வின் தொடக்கத்தை,
பொருள் ஈட்டும் பருவம் வரை நீட்டிக்க வற்புறுத்துவதும்,
வளர்ச்சியின் இயல்பான பரிணாமம் ஆன,
பருவ உணர்வுகளை,
கட்டுப்படுத்த முடியாமல் போகும் பட்சத்தில்,
தோழமை என்று தொடங்கும் வெகுளி உறவு நெருக்கம், பருவக் கவர்ச்சியில் முடியக்கூடாதே என பெற்றோர் தடுமாறுவதும்,
பருவக் கவர்ச்சியை பகுத்தறிந்து உணரும் பக்குவமே இல்லாத ப்ராயத்தில்,
ஆர்வம் கொண்டு,
வந்திருப்பது பருவக் கவர்ச்சி என அறியாமலேயே, “காதலித்தால் என்ன?” என்று கேள்வி மனதில் எழும் தருணத்தில்,
காதலை அடையாளம் காணும் முயற்சியில்,
தனது சுய பாணியில்,
காமத்தை அடக்கி புனிதத் தோழமை உணர்வுடன் பழகுவதில் தன் முயற்சி காட்டி,
அதில் வெற்றி பெறுவதில் நாட்டம் காட்ட துணிவதும்,
ஆகிய இந்த இருவேறு வழிப்பாதைகள் முரண்களை உருவாக்கி அவற்றை உறுதியாக்குகின்றன.
தனி-சுயம் என்பது சந்தேகமின்றி பருவக் கவர்ச்சியால் தூண்டப்பட்டாலும்,
அந்த கவர்ச்சி வரும்போது,
ஒழுக்கம் என்ற பேரில் அதை அடக்கி ஆளுமை கொள்வதும்
அதன் பரிணாமமாக காதல் உதிப்பது என்பதும் இயல்பே.
காதல் செய்யாதே என்பது
மிக மெல்லிய நூலில் நடக்கும் மனித குலத்தை
(பருவ வயது அத்தனை துல்லிய உணர்வுகளை கொண்டது)
தொடர்ச்சியாக, சன்னமாக அதிர்வு கொள்ள வைக்கும் செயல்.
(நூலில் நடக்கும்போது தள்ளிவிட்டால் நூலில் இருந்து விழுந்து வேறு பாதை தேடிக் கொள்ளலாம், அன்றி நடக்க விட்டால் ஒருவேளை நடந்து வெற்றி கொள்ளலாம்.
நடப்பது கட்டாயமாகிய பிறகு, நடப்பதற்கு
இடைஞ்சல் செய்து கொண்டே இருந்தால்,
ஒருமுகக் குவிப்பு சிதறுவதால் அதிர்ச்சி ஏற்பட்டு மனச்சிதைவு தொடங்குகிறது.
முரண்கள் உறுதியாகி போராட்டம் தொடங்குகிறது)
காதல் மற்றும் காதல் மறுப்பு என்பது தனிமனித உணர்வுகளின் இருவேறு திசைப் பார்வைகளே.
தான் முதன்மைப் படுத்தும் பொருள் ஈட்டல் நிலை வந்தபின்பும்,
தனி-சுயத்தை அங்கீகரிக்க மறுப்பதற்கு இன்னொரு காரணம் தேடுகிறது இந்த மனிதம்.
ஆம். சமூக அந்தஸ்து, பொருளாதார பாதுகாப்பு, உறவுகளின் கௌரவம். இப்படி காதலை தொலை தூரம் விரட்டி அடித்து விடுகிறது.
காதலை தொடங்க நினைக்கும் உணர்வுகள்,
இந்த அனைத்தும் தங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்று ஆழமாய் விரும்புகின்றன.
அதில் வரட்டு பிடிவாதம் கொள்ளும் சமுதாயத் தாக்கம் எனும் போர்வை,
சற்றே நடுக்கம் காணும்போது,
குரோதம் கொள்ளும்,
பண்பில்லாது தவிக்கும் பழமைவாதம்,
சாதி - இன வேறுபாடு எனும் ஆயுத்த்தை தூண்டிவிட்டு குளிர்காயத் துணிகிறது.
அதில் தன்-வர்க்கத் தோன்றலாயினும், கவலை கொள்ளாமல், வாழ வேண்டிய தனது வருங்கால சந்ததியை வெட்டி சாய்க்கிறது,
உயிரை அழித்து எரித்து தன் மனம் குளிர்க்கும் கொடுஞ்செயல் புரிந்து,
நியாயம் செய்து விட்டதாக திருப்தி கொண்டு கொடூரப் புன்முறுவல் செய்கிறது.
திருந்த வேண்டியது,
இந்த பண்பு இல்லாத,
பழமைவாத சிந்தனைதான்.
கலந்தாய்வு வேண்டியது
இந்த பாமரச் சிந்தனைக்குத்தான்.
காதலை மறுப்போருக்கும் அதை மறுப்பதற்கு காரணங்களை தேடிதேடி சொல்பவர்க்ளுக்கும்
ஒரு பணிவான வேண்டுகோள்.
காதலை புரிந்து கொள்ள உங்கள் முயற்சியை தொடங்குகள்.
அதை மறுக்க நீங்கள் தேடும் காரணங்கள் தானாகவே மறைந்து விடும்.
அப்போது "காதல்-மறுப்பு" என்பதே பொருட்காட்சியில் வைக்கப்படும்
ஒரு வரலாறாக மாறிவிடும்.
சிந்தனை தொடரும்……