அறை
அறை
(கவிதை)
கருவறையில் கண்டு வந்த கனத்த நிம்மதியைக்
காலம் முழுதும் தேடினேன் கண்டிலேன் எங்கெனும்
வகுப்பறை வாசலில் வாஞ்சையுடன் தேடியதில்
வண்டிச்சுமைப் பாடங்களே வருத்தத்தின் விருத்தமாய்…
மணவறைக் கோட்டத்தில் மாண்புடனே தேடியதில்
இல்லறச் சுமைகளே இறக்க முடியா சோகங்களாய்….
பள்ளியறைக் கூடலில் பருவத்தின் மேய்ச்சலில்
பரிதாபமாய்த் தேடியதில் பந்தங்களே பாச வலையாய்…
பூஜையறை வேள்வியில் புனஸ்காரப் புதையலில்
புனிதமாய்த் தேடியதில் புரிபடா புதிர்களே புற்றீசல்களாய்…
சமையலறைச் சதுக்கத்தில் சாமார்த்தியமாய்த் தேடியதில்
வியாதிகளின் விலாசங்களே விளங்காத வியப்புக்களாய்….
இதயமெனும் கோட்டையில் இங்கிதமாய்த் தேடியதில்
இயந்திர வாழ்க்கையின் யதார்த்தங்களே இயல்புகளாய்…
அறிவுத் தூளியில் தெளிவைத் தாலாட்டியதில்
ஆத்மார்த்தப் பிணைப்புக்களே அர்த்தமிலா அவலங்களாய்…
நித்திரைப் பவனியில் நித்தமும் தேடியதில்
நிலையாக் கோட்பாடுகளே நிர்வாணத் தரிசனங்களாய்…
இலக்கின்றித் திரிந்தே இறுதிவரை ஓடியதில்
துலக்கியது உண்மையை தூயோர் மறைநூல்
நல்லுளங் கொண்ட நாயகர் ஆயினும்
அல்லுளங் கொண்ட அரிதாரிகள் ஆயினும்…
கலலறை யொன்றெ கடைசிப் பீடமாம்
காணலாம் அங்குதான் கருவறை நிம்மதியாம்!!!!
***
முகில் தினகரன்
கோயமுத்தூர் – 6.